1994-ல் வெளியான தொட்டா சினுங்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தேவயானி. அப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்ததால், பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். மேலும் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்துள்ள தேவயானிக்கு, 2004-க்கு பின்னர் படவாய்ப்புகள் குறைந்தால், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அவ்வப்போது, ஒருசில படங்களில் அக்கா, அம்மா வேடத்திலும் நடித்து வந்தார்.
இந்நிலையில், தேவயானி தற்போது மலையாளத்தில் ‘மை ஸ்கூல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு பள்ளிக்கூட ஆசிரியை வேடம். பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை நாய் கடித்து விடுகிறது. அவனை காப்பாற்றுவதற்காக வகுப்பு ஆசிரியை போராடுவதே படத்தின் கதை. அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் இளம் ஹீரோவின் அக்காவாக தேவயானி நடிக்கிறார்.