பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி ஜப்பான் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
ஜப்பான் செல்லும் பிரதமர், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன் மேலும் பல உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வருகை தரும் பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்பதாகவும், இந்த விஜயம் காரணமாக ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதமருடன் அமைச்சர்கள் சரத் அமுனுகம, மலிக் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, விசேட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் ஜப்பான் செல்கின்றனர்.