யாழ் – நெடுந்தீவு பகுதியில் ஜேசுதாஸ் லக்சாயினியின் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற குற்றவாளிக்கே இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு நெடுந்தீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபரை நெடுந்தீவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தன.
“நான் கொலை செய்யவில்லை” என குறித்த நபர் தெரிவித்த போதும் அனைத்து சாட்சியங்களும் அவருக்கு எதிராகவே காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 5 வருடங்களுக்குப்பிறகு குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.