மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான நெருக்கடியான போட்டியில், சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றது அற்புதமானது என ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய (வியாழக்கிழமை) இரண்டாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி வீழ்த்தியது. இப்போட்டியில் களத்தில் இறுதிவரை இருந்த ஸ்டீவ் ஸ்மித் சிக்சருடன் போட்டியை நிறைவுக்கு கொண்டுவந்தது ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது.
அதேவேளை ஆட்மிழக்காது 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இவர் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில், தொடரின் முதல் வெற்றி குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “புனே ஆடுகளம் துடுப்பாட்டம் செய்ய அருமையான இடமாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக கடைசி வரை களத்தில் நின்றேன். கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அல்லது பொல்லார்ட்தான் வீசுவார் என்பதை அறிந்து இருந்தோம். எனவே அவரை குறிவைத்து விளையாடினோம். நெருக்கடியில் சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றது அற்புதமானது.
இம்ரான் தாஹீர் சிறப்பாக பந்து வீசினார். அவரை முன்கூட்டியே பந்து வீச விரும்புகிறேன். நடுத்தர ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு உதவியாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் மெதுவான பந்துவீச்சு இருந்தாலும் 180 ஓட்ட இலக்கை எடுக்க கூடியது தான்” என கூறினார்.