நீண்ட இடைவேளைக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொண்ட அதிரடி துடுப்பாட்ட வீரரான யுவராஜ்சிங், மீண்டும் அணிக்கு திருப்பியது ஏன் என்பதை தற்போது குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததாக காணப்பட்ட தனது கிரிக்கெட் பயணம், தற்போது மிக நல்ல மனநிலையில் இருப்பதாக உணர்ந்ததாலேயே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியதாக யுவராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியில், பெங்களூர் அணிக்கெதிராக 23 பந்துகளில் அரைசதத்தை கடந்த யுவராஜ், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் அனுபவித்து விளையாடினேன். கடந்த சில ஆண்டுகளாக எனது துடுப்பாட்டத்தில் ஏற்றமும் இறக்கமும் கண்டு வருகிறேன். ஆனால் உண்மையிலேயே தற்போது மிக நல்ல மனநிலையில் இருப்பதாக உணருகிறேன். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியதும் அதற்கு ஒரு காரணம். இதனால் என்னால் நெருக்கடியின்றி இயல்பாக விளையாட முடிந்தது.
இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்ற கவலை இப்போது இல்லை. களம் இறங்கி சூழ்நிலைக்கும், எனது திறமைக்கும் தகுந்தபடி விளையாடுகிறேன்.
ஹைதராபாத் எனக்கு எப்போதும் இராசியான இடம். இங்கு நிறைய ஓட்டங்கள் குவித்த போது தான், நான் இந்திய அணிக்கு மறுபடியும் அழைக்கப்பட்டேன். எனது துடுப்பாட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திறமையை அடுத்து வரும் போட்டிகளுக்கும் கொண்டு செல்வேன் என்று நம்புகிறேன்’ என கூறினார்.