பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட் ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிகரெட் பெட்டிகளில் 80 வீத எச்சரிக்கைப் புகைப்படம் கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 பகுதிகளில் பெயரை மட்டுமே குறிக்கும் வகையில் ஏற்பாடு இடம்பெறும். அத்துடன், தனி சிகரெட் விற்பனைக்கு தடைவிதிக்கப்படும். அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் உள்ள பகுதியின் 500 மீற்றர் வரையான தூரத்தில் சிகரெட் விற்பனை செய்வதற்கும், மதுபானம் விற்பதற்கும் தடை விதிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.