சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் பிறந்து 9 மாதங்களே ஆன இரட்டை குழந்தை பலியாகி இருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப்போர் 7-வது ஆண்டாக நீடிக்கிறது. அங்கு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் கடந்த 4-ந் திகதி போர் விமானங்கள் கண்மூடித்தனமான வகையில் விஷ வாயு தாக்குதலை நடத்தின. இதில் சிக்கி 72 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்துக்கு சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தான் காரணம் என அமெரிக்காவும், இங்கிலாந்தும் உறுதிபட குற்றம் சாட்டுகின்றன.
இந்த விஷ வாயு தாக்குதலில் பலியானவர்கள் பற்றி வெளியாகி வருகிற தகவல்கள் நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளன.
இந்த தாக்குதலில் அப்தெல் ஹமீது அல்யூசுப் என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகள், 2 சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்து விட்டார்.
அதுவும் இந்த தாக்குதலில் பலியான அவரது 2 குழந்தைகள் இரட்டைக்குழந்தைகள், பிறந்து 9 மாதங்களே ஆன நிலையில் விஷ வாயு தாக்குதலில் பலியாகி இருப்பது பெருத்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலில் குடும்பத்தினர் பாதிப்புக்கு ஆளானபோது அவர்களை அவர் சிகிச்சைக்கு எடுத்துவந்தபோதும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை.
இறந்து போன தனது இரட்டைக் குழந்தைகள் அயா மற்றும் அகமதுவை அவர் கைகளில் ஏந்திக்கொண்டு “அப்பாவுக்கு குட்பை சொல்லுங்கள்… அப்பாவுக்கு குட்பை சொல்லுங்கள்” என கதறியது உயிரை உறைய வைப்பதாக அமைந்துள்ளது. இத்தகைய கொடூர செயல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் சிரிய மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.