ரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை என்று கூறுகிறார் ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன். இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை நிறுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த். தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தடுத்தமை காரணமாகவே ரஜனிகாந்த் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார். ரஜனிகாந்த் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலைப்பாடு எப்படியானது என குமுதம் இதழுக்கு ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்த கருத்துக்கள்.
ரஜனிகாந்த் ஈழத்திற்கு வந்து லைக்கா நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கையளிப்பதாக இருந்தது. அதற்கு தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு என்பது லைக்கா நிறுவனத்திற்குரியதே. ஏனெனில் 2013இல் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆட்சியின் போது காமன் வெல்ஸ் மாநாட்டிற்கு லைக்கா நிறுவனம் அனுசரனை வழங்கியிருந்தது. இது தமிழக மக்கள் மாத்திரமின்றி ஈழத்து மக்களும் விரும்பாத ஒரு செயலே. இதனையடுத்து கத்தி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்த போதும் அதற்கும் எதிர்ப்பு எழுந்தது.
ஈழத்திற்கு எவரும் பயணம் மேற்கொள்ள இயலும். முப்பதாண்டு போராலும் 2008 மற்றும் 2009இல் நடந்த இறுதி இனப்படுகொலை யுத்தத்தாலும் இனப்படுகொலையின் வடுவாயிருக்கும் ஈழ மண்ணை எவரும் வந்து பார்க்க முடியும். கடந்த காலத்தில் பல்வேறு கலைஞர்கள், திரைத்துறை சார்ந்தவர்கள் எல்லாம் வந்துள்ளனர். ஓவியரும் கலை இயக்குனருமான மருது ஈழத்திற்கு பல முறை வந்திருக்கிறார். நடிகர் சண்முகராசன் வந்திருக்கிறார். வன்னியில் புதுக்குடியிருப்பில் நடந்த நாட்டுக் கலை நிகழ்வு ஒன்றுக்காக நாசர் வந்திருந்தார். தனது பயணத்திற்கு எதிர்ப்பு வந்ததாக நாசர் சொன்னார்.
ஈழத்திற்கு நாசர் வந்திருந்தபோது கனத்த மனதுடன் உரையாடியிருந்தார். ஈழ மண் குறித்த எதிர்பார்ப்பு, இன்றைய ஈழத்தின் கோலம் எல்லாவற்றை பார்த்து நொந்ததைப் பார்த்தேன். ஈழ விடுதலைக்கு ஆதரவானர்களை வருகை தராமல் தடை செய்வதே இலங்கை அரசின் நோக்கம். அந்த தடைகளையும் தாண்டி பலர் வந்திருக்கிறார்கள். திரைப்படபாடலாசிரியர் வைரமுத்துவும் 2016 பொங்கல் விழாவுக்காக வந்திருக்கிறார். ஆனால் யாரின் அழைப்பின் பேரில் வருகிறார்கள் என்பதும் என்ன அரசியலுக்காக வருகிறார்கள் என்பதுமே முக்கியமானது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழகத்தில் இருந்து வரும் பலர் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் வந்தபோதும் பலர் அதை எதிர்தார்கள். என்னைப் போன்றவர்களும் அதை எதிர்த்தோம். இந்திய அரசு மற்றும் இந்திய துணைத் தூதரகத்தின் பேரில் மாவீரர் ஒருவரின் நினைவுநாளில் அந்த நிகழ்ச்சி நடத்தியதால் அதற்கு எதிர்ப்பு எழுந்தது.
தமிழகத்தில் உள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காதவர் நடிகர் ரஜனிகாந்த் என்ற அதிருப்தியும் எங்கள் மக்களிடம் உண்டு. சொந்த நாட்டு மக்களுக்கே குரல் கொடுக்காது தன்னுடைய நலன்களுக்காக இந்திய ஆதரவு முகத்தை தக்க வைத்துக் கொள்பவர், இன உரிமைக்காக போராடும் ஈழ மக்களுக்கு எப்படி குரல் தருவார்? எப்படியான புரிதல் அவருக்கு இருக்கும் என்ற கருத்துக்களும் உண்டு. மாவீரர்களின் மண்ணை பார்க்க வேண்டும் அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியிருக்கிறார். ஈழ இனப்படுகொலையின் போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு ரஜனி குரல் கொடுத்திருந்தார்.
அந்தக் குரல் தொடரும் இல்லை. வலிமை பெறவும் இல்லை. இன்றைக்குப் பார்த்தால் ஒரு சம்பிரதாயபூர்வமான கலந்துகொள்ளலாகவே அது இருக்கிறது. மக்களின் கலைஞன், மக்களின் உணர்வுகளை, வாழ்வை பாடும் ஒரு கலைஞன் திரைக்கு வெளியிலும் அந்த மக்களுக்காக வாழ வேண்டும். நடிகர் கமலஹாசன் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று எடுத்துரைத்திருக்கிறார். உலகின் அநீதிகளை கலைஞர்கள் கண்டிக்க வேண்டும். ஒரு கலைஞரின் குரலுக்கு மிகவும் மதிப்புண்டு.
இப்படித்தான் போராடும் ஈழத்து மக்கள் நினைக்கிறார்கள். இந்திய அளவில் , உலக அளவில் பிரசித்தமான ஒரு கலைஞன் எங்கள் மண்ணுக்கு வந்து, எங்களின் வாழ்வை, போராட்டத்தை எடுத்துக்கூறினால் அது நல்ல தாக்கத்தை செலுத்தும். நடிகர் ரஜனிகாந்தின் பயணம் ஒரு கலைஞனின் பயணமாக அமைய வேண்டும். அப்படி அமையவில்லை. தன்னுடைய திரைப்பட நலன் சார்ந்தும் அவரின் திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் நலன் சார்ந்துமே வருகை தந்திருக்கிறார்.
ரஜனிகாந்தின் வருகையை ரத்து செய்தமையை எதிர்த்து ஈழக் கலைஞர்கள் ஒரு போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தனர். அதில் ஈழத்து கலைஞர்கள் எவரையும் காணவில்லை. அது யாரோ தமது நலனுக்காக ஏற்பாடு செய்த போராட்டம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக வீடு திரும்பாமல் வீதிகளில் எங்கள் மக்கள் போராடியபடி இருக்கிறார்கள். சொந்த நிலங்களை விடுவிக்ககோரி இராணுவபடைத்தள வாசலில் வீடு திரும்பாமல் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் ரஜனிகாந்த் வருகையின் ஆதரவிலும் எதிர்ப்பிலும் எங்கள் மக்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. அந்த நிலையிலும் எங்கள் மக்கள் இல்லை.வீரம் செறிந்த ஈழத்தின் எத்தனையோ கதாநாயகர்களை பெற்றெடுத்த எங்கள் மக்கள் இன்று அவர்களின் விடுதலைக்காக தெருவில் பசிகிடக்கிறார்கள். ஈழச் சரித்திரத்தில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய எங்கள் கதாநாயகர்கள் பலர் மண்ணில் உறங்குகிறார்கள். ரஜனிகாந்த் ஈழத்திற்கு வருவது அவருக்குத்தான் பாக்கியமானது.
எதிர்காலத்தில் சுயமாக அரசினதோ, நிறுவனங்களினதோ – அரசியல் வணிக நோக்கமின்றி ஈழத்திற்கு ரஜனி ஒரு பயணத்தை மேற்கொண்டால், எங்கள் தேசத்தைப் பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் இந்திய அளவில் கவனப்படுத்தினால் அது நலன் தரும் நடவடிக்கையாக இருக்கும். ஏனெனில் 60 ஆண்டுகால இன ஒடுக்குமுறையாலும் முப்பது ஆண்டு கால இனப்படுகொலைப் போரினாலும் பாதிக்கப்பட்ட ஈழ இனத்திற்கு கலைஞர்கள், மனித உரிமை வாதிகள் என அனைவரது ஆதரவும் வேண்டும்.