அமைச்சர் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கூறியதாவது:-
சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். யார் வரி கட்டவில்லையோ, பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனைதான் செய்யும்.
சாதாரண மக்கள், அமைச்சர் என்று வித்தியாசம் கிடையாது. அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியது தவறல்ல.
சோதனையின்போது அமைச்சரின் உதவியாளர் முக்கிய ஆவணத்தை தூக்கி ஓடியுள்ளார். உங்களிடம் தவறு இல்லையென்றால் ஏன் ஆவணத்தை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்?
எங்களிடம் எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது என்று ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதானே? இவர்களிடம் தவறு இருக்கிறது. அது வெளியே தெரிந்து விட கூடாது என்று அதை மறைக்க முயன்றுள்ளனர் என்று அவர்களது செயல்பாடுகளே காட்டி இருக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டேதான் இருக்கிறது. தங்களுக்குதான் வெற்றி என்று சொல்ல கூடியவர்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்.
ரூ.90 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாக சொல்கிறார்கள். இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. வழக்கு போடுகிறது. ஆனால் அதே நபர்களுக்கு அரசாங்கம் உதவியும் செய்கிறது.
தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. அவர் மீது வழக்கும் உள்ளது. இந்த நிலையில் அவருக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு குஷ்பு கூறினார்.