மகளுக்குப் புத்தாடை வாங்கிக்கொடுப்பதற்காக பிச்சைக்காரர் ஒருவர் இரண்டு ஆண்டுகள் சிறுகச்சிறுக பணம் சேர்த்திருக்கிறார்.
காவ்சார் ஹூசைன் என்பவர் விபத்து ஒன்றில் தன் வலதுகையை இழந்தார். அப்போதிலிருந்து வேறு தொழில் எதுவும் செய்ய முடியாமல், பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஒருநாள் தன் மகளுடன் ஜவுளிக்கடைக்குச் சென்ற அவர், மகளுக்கு புத்தாடை ஒன்றை வாங்கித்தர விரும்பியிருக்கிறார்.
ஆனால், கடைக்காரர் அவரை பிச்சைக்காரன் என்று விரட்டியிருக்கிறார். அவருடன் சென்ற மகள் தன் தந்தை அவமதிக்கப்பட்டதைப் பார்த்து கண்ணீர் சிந்தியுள்ளார்.
தன் குழந்தையின் அழுகையைப் போக்கி புன்னகையைப் பார்க்க விருப்பிய ஹூசைன், அப்போது முதல் பிச்சை எடுக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்து வந்துள்ளார். அதைக்கொண்டு இப்போது தன் மகளுக்கு மஞ்சள் நிறத்தில் அழகிய புத்தாடை ஒன்றை பரிசளித்துள்ளார்.
தான் பட்ட கஷ்டங்கள் எதுவும் தன் மகளுக்கு வரக்கூடாது என்பதற்காக தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தன் மகளைப் படிக்கவும் வைத்திருக்கிறார்.
மகளின் மீதுள்ள அன்பினால் தனக்குக் கிடைக்கும் குறைந்த தொகையிலும் ஒரு தொகையை சேமித்து மகளுக்கு பரிசளித்த ஹூசைன் பற்றி ஜி.எம்.பி.ஆகாஷ் என்ற புகைப்படக்கலைஞர் தன் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன் ஹூசைன் தன் மகளை புத்தாடையுடன் மொபைலில் புகைப்படம் எடுப்பது போன்ற படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.