கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வழங்கும் சம்பள விவரங்களை அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது, இதில் ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்யும் பெண் ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து தொழிலாளர் துறை மண்டல இயக்குநர் ஜேனட் விப்பர் என்பவர் தி கார்டியனுக்குக் கூறும்போது, “ஒட்டுமொத்த பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கான ஊதிய விவகாரத்தில் கடும் பாரபட்சம் காட்டப்படுகிறது” என்றார்.
அமெரிக்க தொழிலாளர் துறையின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க அரசு சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வெள்ளியன்று தெரிவித்தது.
ஆனால் கூகுள் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளது. “நாங்கள் ஆண்டுதோறும் சம்பள விவரம் குறித்து ஒட்டுமொத்தமாக தீவிர, கறார் ஆய்வு செய்து வருகிறோம், சம்பளத்தில் பாரபட்சம் எதுவும் காட்டவில்லை” என்று கூகுள் கூறியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் 19% தொழில்நுட்பப் பணிகளை பெண்களே கவனித்து வருகின்றனர். கூகுளின் 70,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் மூன்றில் ஒருபங்கு பெண் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் சொந்த விவரங்களைக் காக்கும் பெயரில் சம்பள விவரங்கள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க தொழிலாளர் நலத்துறை சிலிக்கான் வாலியின் அனைத்து சம்பள விவரங்களையும் ஆராய்ந்து வருகிறது. ஏகப்பட்ட அரசு ஒப்பந்தங்களைச் செய்து வரும் நிறுவனங்களில் இத்தகைய பாலின பாகுபாடு நிலவுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழிலாளர் நலத்துறை ஆரக்கிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது, அதாவது மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஆரக்கிள் வெள்ளை ஆண் பணியாளர்களுக்கு பெண் ஊழியர்களை விடவும், வெள்ளையல்லாத பிற ஊழியர்களை விடவும் ஒரே வேலைக்கு சம்பள வேறுபாடு பாராட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்கு தொடர்ந்த்து.