எதிர்வரும் மேதினத்தை இலக்கு வைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் தமது செயற்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளன.
தமக்கான மக்கள் செல்வாக்கை வெளிக்காட்டும் வகையில் மேதின கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறன.
நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேதின பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதில் குறிப்பாக கொழும்பு தேர்தல் தொகுதியில் அதிகளவான உறுப்பினர்களை தமது மேதின கூட்டத்தில் கலந்து கொள்ள செய்வதில் ஐக்கிய தேசிய கட்சி தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிளவுபட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினரும் தமது பலத்தை நிரூபித்துக் காட்டவுள்ளதாக சவால் விட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தினை நடத்தவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சேர்ந்த பெருமளவு மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதிநிதிகள் கடந்த வார இறுதியில் திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களை இணைத்துக் கொண்டு பாரிய மே தின கூட்டம் ஒன்றை காலி முகத்திடலில் நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் மே தின குழுவின் விசேட சந்திப்பொன்று தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.