இலங்கையின் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் கூட ஒன்றுடனொன்று மோதிக்கொள்கின்றன அல்லது வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்கோடு வீதிகளில் வேக எல்லைகளைத் தாண்டி ஓடுகின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான விவாதம் அண்மையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று அமைச்சரால் போக்குவரத்து தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் கூட நாட்டிலே தனியார் பொதுப் போக்குவரத்திற்கும் மற்றும் அரச பொதுப் போக்குவரத்துக்கும் இடையில் பல்வேறுபட்ட நெருக்கடிகள் காணப்படுகின்றன.
மிக முக்கியமாக, ஒற்றுமையின்மை, வழித்தடங்களுக்கான அனுமதிகள் நேர்மையான முறையில் வழங்கப்படாமை போன்ற விடயங்கள் இந்த நாட்டிலே தனியார் போக்குவரத்து துறைக்கும் அரச போக்குவரத்துத் துறைக்கும் இடையில் சமரசம் இல்லாத ஒரு நிலமையை உருவாக்கியிருக்கின்றன.
சாதாரணமாக இன்று இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் கூட, ஒன்றுடனொன்று மோதிக்கொள்கின்ற அல்லது வருமானம் உழைக்கின்ற நோக்கோடு வீதிகளிலே வேக எல்லைகளைத் தாண்டி ஓடுகின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பார்க்கின்றோம்.
அதேநேரத்தில் இந்த அரச பேருந்துகளோடு தனியார் பேருந்துகளும் அவ்வாறான போட்டியில் ஈடுபடுகின்றன.
ஆனால், இந்த நிலைமையிலும் நாட்டிலே பல்வேறுபட்ட இடங்களில் போக்குவரத்துக்கான பேருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
அமைச்சரே, நாட்டிலே பல்வேறுபட்ட இடங்களில் போக்குவரத்துக்கள் சீராக இருக்கலாம். ஆனால், ஒரு தீவான இலங்கைக்குள்ளே இருக்கின்ற சிறு தீவுகளில் போக்குவரத்து வசதிகள் மிகமிக மோசமான நிலையில் உள்ளன.
உதாரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு தனித்தீவாகக் காணப்படுகின்ற நெடுந்தீவிலே ஒரேயொரு சிறிய பேருந்துதான் காணப்படுகின்றது.
நெடுந்தீவிலே வாழ்கின்ற கிட்டத்தட்ட 7,000 மக்களுக்கு 12 கிலோ மீற்றர் நீளமான பாதையிலே ஒரேயொரு பேருந்து காலை 7 மணிக்கு ஒரு சேவையை வழங்குகின்றது.
அதிலும் அரச உத்தியோகத்தர்கள் வருகின்ற போது அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய ஒரு நிலையில், பாடசாலை மாணவர்கள் கருத்திலெடுக்கப்படாமையால் அவர்களுக்கான போக்குவரத்து மிகக் கூடியளவிலே பாதிக்கப்பட்டிருக்கின்றது.
அங்கிருக்கின்ற சாரதியும் நடத்துனரும் தாங்கள் நினைத்தவாறு நேரசூசிகையை கடைப்பிடிக்கின்றார்கள். இலங்கைப் போக்குவரத்துச் சபையின் எந்த கட்டுப்பாடும் இருப்பதாக தெரியவில்லை.
அதேபோல், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சிறு தீவுகளான நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற இடங்களிலே இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சேவைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது மிக முக்கியமான விடயமாகும்.
நெடுந்தீவுக்கான கடல்வழிப் போக்குவரத்துச் சேவையை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் வழங்குகிறார்கள்.
நெடுந்தாரகை மற்றும் வடதாரகை போன்ற வள்ளங்களூடாகவே அந்தப் போக்குவரத்து சேவை இடம்பெறுகின்றது. அதற்கும் உங்களுடைய அமைச்சுக்கும் சம்மந்தமில்லை.
ஆனால், நெடுந்தீவுக்குள் இறங்குகின்ற ஒருவர் மாவலித் துறைமுகத்திலிருந்து அந்த ஊரின் எல்லையிலுள்ள கோட்டைக்காடு வரையும் செல்வதாயின், அதற்கான பேருந்துச் சேவை சரியான முறையில் இடம்பெற வேண்டும். மிகவும் பாதிக்கப்படுவார்.
எனவே, நெடுந்தீவு கிழக்கிலுள்ள மாவலித் துறையிலிருந்து, நெடுந்தீவு மேற்கிலுள்ள கோட்டைக்காடு வரைக்கும் நாளொன்றுக்கு குறைந்தது 3 பேருந்துச் சேவைகளாவது இடம்பெற வேண்டும்.
அப்போதுதான் அங்கே வாழ்கின்ற மக்கள் தங்களையும் இலங்கை நாட்டிலே வாழ்கின்ற பிரஜைகளாக நினைக்கின்ற ஒரு சூழல் உருவாகும். இல்லையென்றால், அவர்கள் ஒரு தனிநாட்டிலே வாழ்கின்ற எண்ணங்களோடுதான் இருப்பார்கள்.
இதேபோன்றுதான் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் போக்குவரத்துச் சேவைகளில் பல்வேறுபட்ட நெருக்கடிகள் காணப்படுகின்றன.
பல பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றுவதில்லை. அதற்குக் காரணம், அவர்களுக்குள் நிலவுகின்ற போட்டி.
கிளிநொச்சியிலிருந்து ஒரு பேருந்து முழங்காவில் வரைக்கும் செல்கின்றது. இதே நேரம் மன்னாரிலிருந்து முழங்காவில் வரைக்கும் இன்னுமோர் அரச பேருந்து வருகின்றது. முழங்காவிலில் இந்த இரண்டு பேருந்துகளும் பயணிகளை மாற்றம் செய்கின்றன.
அவர்கள் வருமானத்திற்காகப் போட்டி போடுகின்றார்கள். ஆனால், இந்தப் போக்குவரத்துப் பாதைகளில் பாடசாலைப் பிள்ளைகள், நோயாளிகள் ஆகியோர் அதிகமாகப் புறந்தள்ளப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக, பள்ளிக்குடா, பூநகரிப் பிரதேசங்களான நாலாம்கட்டை, செம்பங்குன்று, பல்லவராயன்கட்டு, முழங்காவில் போன்ற இடங்களில் போக்குவரத்துச் சபையினர் பாடசாலைக்குச் செல்கின்ற பிள்ளைகளுக்காக நல்ல மனதோடு தமது போக்குவரத்துச் சேவைகளை நடத்துவதில்லை.
அதுபோல், பரந்தனிலிருந்து முல்லைத்தீவு செல்கின்ற பாதையில் பரந்தன், முரசுமோட்டை, கண்டாவளை போன்ற பிரதேசங்களிலே இருக்கின்ற பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதற்காக நீண்ட நேரம் வீதிகளிலே காத்திருக்கின்றார்கள்.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, முகமாலை, பளை, இயக்கச்சி, உமையாள்புரம் போன்ற இடங்களில் இருக்கின்ற மாணவர்கள் காலையிலே பேருந்துகளுக்காக வீதிகளிலே நிற்பதை ஒவ்வொரு நாளும் நான் பார்க்கிறேன்.
எந்தவோர் அரச பேருந்தும் கருணையோடு சேவை செய்வதாகத் தெரியவில்லை. பேருந்துகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகின்றன. இதனைவிட, பல சாரதிகளுடைய கட்டுப்பாட்டை மீறிய ஓட்டங்கள் இந்த நாட்டிலே மிகக்கூடியவில் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன.
இலங்கையிலே நடந்த விபத்துக்களில் மிக ஆபத்தான, சகிக்க முடியாத கொடூரமான விபத்துக்கள் ஏ-9 வீதியிலே நடந்திருக்கின்றன. இவ்வாறான ஒரு சூழலில், சரியான ஒரு போக்குவரத்துச் சேவை அந்த இடங்களுக்குக் கிடைத்திருக்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது.
ஆகவே, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தம்) சட்டமூலத்தினை வெறுமனே ஒரு சட்டமாக நினைக்காமல், அதனுடைய சேவைகள் மக்களைச் சென்றடைகின்றனவா?, மக்களுக்கான இந்த சேவைகள் சென்றடைவதற்கான காலச் சூழல் எவ்வாறு அமைந்திருக்கின்றது? என்பவை பற்றி நாங்கள் இந்த இடத்திலே பார்க்க வேண்டும்.
அதேபோல, மட்டக்களப்பிலே வாழைச்சேனை, வாகரை போன்ற இடங்களில் மக்களுக்கான போக்குவரத்துச் சேவை காலைநேரங்களில் சீரற்றுக் காணப்படுகிறது. இதற்கு, சாரதிகளுக்கான பற்றாக்குறை, தொழிலாளர்களை நியமிப்பதில் இருக்கின்ற அசமந்தப் போக்கு என்பவை மிகமிக முக்கியமான காரணங்களாகும்.
சாதாரணமாக வடக்கையும், கிழக்கையும் எடுத்துக்கொள்வோம். 90 சதவீதமான தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிராந்தியத்திலே யாழ்ப்பாணத்தின் பிரதான சாலை முகாமையாளர் சிங்கள மொழி பேசுகின்றவராக இருக்கின்றார். வட மாகாணத்திற்கான முகாமையாளரும் சிங்கள மொழி பேசுபவராக இருக்கின்றார்.
அதேநேரத்திலே, வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடக்கின்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலே அவர் பங்குகொள்வதில்லை.
அதாவது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்குகொண்டு போக்குவரத்து தொடர்பான தன்னுடைய கருத்துக்களை மாகாண முகாமையாளர் முன்வைப்பதில்லை.
அவர் தனியான அரசுபோல அங்கே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அதேபோன்றுதான் அங்கிருக்கின்ற ஊழியர்களும் செயற்படுகின்றார்கள்.
உதாரணமாக கிளிநொச்சிச் சாலையை எடுத்துக்கொண்டால், அந்தச் சாலையில் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கடமையில் இல்லை. யாழ்ப்பாணத்திலிருந்தோ அல்லது வவுனியாவிலிருந்தோ அல்லது வேறு இடங்களிலிருந்தோ தான் அங்கு பணிக்கு வருகின்றார்கள்.
அவர்களால் இரவு பகல் பாராது அந்த மக்களுக்கான சேவைகளை வழங்க முடிவதில்லை. அத்துடன், பேருந்துகளும் போதியளவு இல்லை. இவ்வாறான குறைபாடுகள் அங்கு அதிகமாக காணப்படுகின்றன.
அமைச்சரே, இவற்றை நீங்கள் நல்ல மனதோடு நிவர்த்தி செய்வீர்களென்று நான் நினைக்கின்றேன். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சாரதிகள், நடத்துனர்களுக்கான பட்டியலை ஏற்கனவே நான் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.
பாதிக்கப்பட்ட இவர்களுக்கு அத்தகைய நியமனத்தை வழங்கினால் அந்த மாவட்டத்திலே ஒரு நல்ல பணியை மற்றும் சேவையை வழங்க முடியும்.
அதை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். சாரதிகள், நடத்துனர்களாவது அந்த மாவட்டம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என சிவஞானம் சிறீதரன் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.