நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை தான் கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் எதிர்த்து வருவதாகவும் எனினும் ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என தற்போது எண்ணுவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டி தெல்தெனிய ஆரம்ப வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதை 1977 ஆம் ஆண்டில் இருந்து நான் எதிர்த்து வந்தவன்.
எனினும் சில சந்தர்ப்பங்களின் போது ஜனாதிபதியின் அதிகாரங்களும் இருக்க வேண்டும் என எண்ண தோன்றுகிறது.
அமைச்சரவையில் ஒரு யோசனை கொண்டு வரப்படும் போது பல்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும் ஜனாதிபதி நீதிபதியாக இருந்து இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் போது அந்த யோசனையில் ஜனாதிபதி வெற்றிப்பெறுவார் என்பதே இதற்கு காரணம். இதனால், ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருப்பது நல்லது என சில நேரங்களில் தோன்றுகிறது.
அதேவேளை அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதியை பதவிக்கு கொண்டு வரவே அந்த சங்கம் இதனை செய்து வருகிறது.
நாக தெய்வம் சங்கத்தின் தலைவர் பதவியை தனக்கு வழங்கியிருப்பதாக பாதெனிய எண்ணுகிறார். இதன் காரணமாகவே சைட்டம் பிரச்சினையை பயன்படுத்தி எதிர்ப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசியல் அதிகார புரட்சி ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் நடைமுறைப்படுத்தினேன். அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எதிர்நோக்கி பிரச்சினைகளை எதிர்நோக்க நான் விரும்பவில்லை.
நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்லதோ கெட்டதோ அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தங்களுக்கு நான் அடிப்பணிய மாட்டேன் என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.