விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘தெறி’. இப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன், மீனா மகள் நைனிகா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
விஜய் ரசிகர்களை மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இப்படம் தற்போது மீண்டும் ரிலீசாகவிருக்கிறது. வரும் தமிழ் புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ரோகிணி திரையரங்கம் ‘தெறி’ படத்தை மீண்டும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, ஒரேயொரு காட்சிக்கு மட்டுமே ஏற்பாடு செய்திருந்த இந்த திரையரங்கம், தற்போது இந்த படத்தை மீண்டும் பார்க்க ரசிகர்களிடையே ஆர்வம் பெருகியுள்ளதால் கூடுதலாக இன்னொரு காட்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. காலை 8.45 மணிக்கு ஒரு திரையரங்கிலும், 9.00 மணிக்கு மற்றொரு திரையரங்கிலும் ‘தெறி’ படம் திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘தெறி’ படம் கடந்த தமிழ் புத்தாண்டில் வெளிவந்தது. ஒரு வருடம் கழித்து மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. திரையரங்கில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆர்வமாக இருக்கின்றனர்.