ஆர்.கே நகர் தேர்தலை ரத்து செய்து அதிரடி காட்டியுள்ள தேர்தல் ஆணையம் வரும் 17-ந் தேதியன்று அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதையும் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. அப்படி சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டால் தினகரன் அரசியலில் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும் என எதிர்பார்க்கிறது ஓபிஎஸ் தரப்பு.
அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு கொடுத்துள்ளது. இம்மனு மீதான 2-வது கட்ட விசாரணை வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது.
ஏற்கனவே அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இதனையடுத்து ஆர்கே நகர் தேர்தலையும் ரத்து செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உள்ளது தேர்தல் ஆணையம். இதனிடையே சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
அதிமுக கட்சி விதிகளின் படி அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தே ஒரு பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலர் இல்லாத நிலையில் முந்தைய பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தான் கட்சியை வழி நடத்த முடியும்.
இதனடிப்படையில் சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது. அப்படி சசிகலாவின் நியமனமே செல்லாது என்கிறபோது தினகரனின் துணைப் பொதுச்செயலர் பதவியும் காலியாகிவிடும். இதனால் தினகரனின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறது ஓபிஎஸ் தரப்பு.