சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 400-க்கும் மேற்பட்டோர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டிருந்தது.
விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பிரதிநிதிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் புதிய வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் தூதர் மேத்யூ ரைகிராப்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.