சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய தொகுதியின் அமைப்பாளராக கடமையாற்றி வந்த ஜொன்ஸ்டன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பதவி நீக்கப்பட்டமை குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜொன்ஸ்டன்…
என்னை பதவியிலிருந்து விலக்கியமை ஆச்சரியப்படுத்தவில்லை. அதனால் வருந்தவும் இல்லை.
மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்து அப்பம் சாப்பிட்டு சென்ற மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கின்றார்.
மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இதனைவிடவும் பெரிய விடயங்களை எதிர்பார்க்க முடியாது.
நாம் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்திருக்கின்றோம் என்பதனை மைத்திரிபால புரிந்து கொண்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
அன்றும் இன்றும் நாம் மஹிந்த ராஜபக்ஸவுடனேயே இருக்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் மக்கள் தலைவர்களை நீக்கி வருகின்றார்.
தேர்தல் ஒன்றை நடத்தினால் இதன் பலன்களை தெளிவாக காண முடியும். முடிந்தால் தேர்தல் ஒன்றை வைக்குமாறு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு சவால் விடுக்கின்றேன்.
பொதுத் தேர்தலின் பின்னர் நாம் பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை அதன் காரணமாகவே இப்பொழுது எம்மை சிறையில் அடைக்கின்றார்கள்.
முதுகெலும்பு இல்லாத சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பதவியின் பின் ஓடினார்கள். நாம் பதவிகளுக்கு வளைந்து கொடுக்கப் போவதில்லை.
நாடும் பொருளாதாரமும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. முடிந்தால் தேர்தல் ஒன்றை நடத்துமாறு நாம் சவால் விடுக்கின்றோம் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.