கோடிக்கணக்கில் பணம் வைத்து இருந்தும் காலம் முழுவதும் நோய்வாய்ப்பட்டு, எதுவும் சாப்பிட முடியாமல் இருந்தால், கோடி பணம் இருந்தும் என்ன பயன்? முதுகுப்புறமாக வரக்கூடிய எதிரியை எப்படிக் காண முடியும்?
வாழ்க்கையில் இந்த மூன்றையும் சந்திக்காதவர் ஒருவரும் இல்லை என்றே கூறலாம். இம்மூன்றும் பற்றி ஜோதிட சாஸ்திரங்களில் அருமையான விளக்கங்களைக் காணமுடிகிறது.
நோய், கடன், எதிரி இம்மூன்றுக்கும் உரிய இடம் 6 – ம் பாவம் ஆகும். இந்த 6 – ம் பாவத்தைக் கொண்டுதான் ஜாதகருக்கு வரக்கூடிய நோய்கள், கடன் மற்றும் எதிரிகள் பற்றி, துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதன்படி 6 – ம் பாவம், அதன் அதிபதி மற்றும் 6 – ம் பாவத்தில் நின்ற கிரகங்கள் பற்றி பார்ப்போம்.
நோய், கடன் மற்றும் எதிரிகளின் காரகக்காரன் சனி. ஒருவரது ஜாதகத்தில், சனி பகவான் வலுவாக இருந்தால், நீண்ட ஆயுள் இருக்கும். ஆனால், நோய், கடன் மற்றும் எதிரிகளின் தொல்லை இருக்கும்.
6-ம் பாவாதிபதி யோகாதிபதியுடன் சேர்வது அல்லது யோகாதிபதி நட்சத்திர சாரம் பெற்றாலும், 6-க்கு உடையவன் கேந்திர-திரிகோண பாவங்களில் நின்று இருந்தால் நோய், கடன், எதிரிகள் தொல்லை வந்து போகும்.
6-ம் பாவாதிபதி லக்னத்தில் நின்றாலும், லக்னாதிபதியுடன் சேர்ந்தாலும் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி தனக்குத்தானே நோய்-கடன்-எதிரியை உருவாக்குவார்கள். பரம்பரை நோய்கள் வரக்கூடும்.
லக்னத்தில் சனி நின்றாலே பிறர் வெறுக்கும் காரியங்களைச் செய்வார்கள். இவரைப் பார்க்கவே சிலருக்குப் பிடிக்காது. எனவே, எங்கு சென்றாலும் எதிரிகள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பார்கள்.
6 – ம் பாவாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலும் நோய், கடன் மற்றும் எதிரிகளின் தொல்லை நீங்காது.
6 – ம் பாவத்தில் சனி, ராகு, கேது நின்று இருந்தால், நம்பியவர்களால் பணம் இழப்பு, நோய்கள் மற்றும் எதிரிகள் தானாகவே அமைந்து விடும்.
6 – ம் பாவாதிபதியுடன் எந்த கிரகம் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் வரக்கூடும்.
6-ம் பாவத்தில் இருக்கும் கிரக திசை நடந்தாலும் 6-ம் பாவாதிபதியுடன் சேர்ந்த கிரகதிசை நடந்தாலும், நோய்-கடன்-எதிரிகளின் தொல்லைகள் இருக்கும்.
கோசாரத்தில், குருபகவான் ராசிக்கு 6 – ம் இடத்துக்கு வரும் போது உடலில் உள்ள பல நோய்கள் வெளியில் தென்படும்.
யோக திசைகள் நடக்கும் போது, எந்தவித நோயும் உடலில் தெரியாது. கெட்ட திசை தொடங்கியதும், பல நோய்கள் உடனே தென்படும். ஒருவரது ஜாதகத்தில், யோகாதிபதி மற்றும் சுபர்கள் மற்றும் குரு வலுவாக இருந்தால் போதும், நோய், கடன் மற்றும் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து எளிதாக விடுபட்டு விடுவார்கள். வியாழக்கிழமை விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வந்தால், அவர்களின் பிரச்னைகள் விரைவில் தீரும்.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடப்பவர்கள், சனிக்கிழமையன்று விரதமிருந்து, எள் தீபம் ஏற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.