விஷ்ணு விஷால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை தயாரித்து நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து ‘கதாநாயகன்’ என்ற படத்தையும் தயாரித்து நடித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் மூன்றாவதாகவும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் கதாநாயகியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த இன்னொரு நடிகையும் விஷ்ணு விஷாலின் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ‘மெரீனா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஓவியதான் விஷ்ணு விஷாலின் இந்த படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்’ இடம்பெறும் வசனமான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்பதை இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செல்லா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.