முகாம்கள் மற்றும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளின் பெயர் பட்டியலையேனும் வெளியிட வேண்டும் என கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) 50ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவர் கூறுகையில், காணாமல் ஆக்கப்பட்ட எமது பெயர் பட்டியலையேனும் வெளியிட வேண்டும் என்பதே எமது முதல் கோரிக்கையாகும்.
முகாம்கள் மற்றும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இதற்காகவே மழை, வெயிலையும் பொருட்படுத்தாது, இரவு பகலாக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்துவிட்டு, நாம் பாரிய துன்பங்களை அனுபவித்து வருகிறோம். எமது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.