போருக்காகத் திரண்டு வந்த படையிலிருந்து 300 பேர் திரும்பிவிட்ட பிறகு மீதமுள்ள பெரும்படை வீரர்களுடன் நபி முஹம்மது (ஸல்) எதிரிகளை எதிர்கொள்ளப் புறப்பட்டார்கள். உஹுத் என்ற இடத்திற்கு வேறு வழியாக வந்தடைந்து ‘உத்வத்துல் வாதி’ என்ற கணவாயின் அருகில் தங்களது கூடாரங்களை அமைத்தனர்.
எதிரிகள் எந்தப் பக்கத்திலிருந்தும் முஸ்லிம்களை நெருங்கிவிடாதபடி அவர்களைச் சுற்றி திறமையான அம்பெய்பவர்களை நபிகளார் நியமித்தார்கள். படையைப் பின்புறத்திலிருந்து யாரும் தாக்கிவிடக் கூடாதென்று திறமையான அம்பெய்யும் சிறு குழுவை அருகிலிருந்த மலையில் நிறுத்தினார்கள் நபி(ஸல்). அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் காலாட்படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள்.
“போரில் நாங்கள் கொல்லப்பட்டு எங்கள் சடலங்களைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுக்கு நியமித்த இடத்தைவிட்டு நகராதீர்கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்துப் போர்க் களத்தில் செத்து வீழ்ந்துகிடக்கும் அவர்களை மிதித்துச் செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்” என்று நபி (ஸல்) படைவீரர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் படைவீரர்களை நியமித்தார்கள். எதிரிப்படையில் மிகத் திறமையான காலித் பின் வலீத் தலைமையேற்றிருக்கும் குதிரைப் படை முஸ்லிம் அணியை நெருங்கிவிடாதபடியும் பார்த்துக் கொள்ள வீரர்களை நியமித்தார்கள் நபி முஹம்மது(ஸல்).
நபி(ஸல்) மிக நுணுக்கமான இராணுவ திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு ஒரு கூர்மையான வாளையும் எடுத்துத் தோழர்களிடம் “இதற்குரிய கடமையை நிறைவேற்றுபவர் யார்?” என்று ஆர்வத்தைத் தூண்டியபோது, அதனைப் பெற்றுக் கொள்ளப் பலர் முன் வந்தாலும் அபூ துஜானா(ரலி) அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களிடன் கட்டளை வரும் வரை போரை ஆரம்பிக்கக் கூடாது என்றும் படைவீரர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்.