தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. புதிய அரசியலமைப்பா அல்லது அரசியலமைப்பு திருத்தமா என்ற இழுபறி நிலைமை தென் இலங்கையில் விவாதப் பொருளாகியிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தவிட்டது. இன்னும் மூன்று ஆண்டுகளே எஞ்சி இருக்கின்றது. அதற்குள்ளும் இரண்டு ஆண்டுகளை நிம்மதியாக நகர்த்திச் செல்வதற்கு வசதியாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றது.
அந்த இரண்டு ஆண்டு கால அவகாசத்தை நிறைவு செய்யும்போது இந்த அரசாங்கத்திற்கு மிகுதியாக இருப்பது ஒரு ஆண்டு ஆட்சிக் காலம்தான். அதற்குள் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் அழுத்தங்களை விடவும் பாரிய பிரச்சினைகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக தலை தூக்கியிருக்கும். எனவே அவ்வாறான ஒரு பொழுதில் ஐ.நா தீர்மானத்தை விடவும் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அரசாங்கம் செயற்பட வேண்டியிருக்கும்.
அப்போது பிரச்சினைகளைப் பேசிப் பேசியே இறுதி ஒரு வருடத்தைக் கடத்திவிடலாம் என்ற எண்ணத்தில் நல்லாட்சி ஆட்சியாளர்கள் இருக்கலாம். ஆட்சியாளர்களின் கனவு இவ்வாறானதாக இருந்தாலும், நல்லாட்சிக்குள்ளே நாளாந்தம் தலைதூக்கும் பிரச்சினைகளை அவதானிக்கும்போது, நல்லாட்சி ஐந்து வருடங்கள் என்ற இலக்கை எட்டாமல், இடை நடுவிலேயே தனது ஆட்சியை இழந்துவிடுமோ என்ற அச்சங்களும் அவர்களிடம் இருக்கவே செய்கின்றது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் நல்லாட்சியின் இணக்க ஒப்பந்த காலம் நிறைவடைகின்றது. இவ்வருடம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் ஆட்சிக்காலம் முடிவுறும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதென்றும், அதற்கு முன்னர் புதிய தேர்தல் முறையின் பிரகாரம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதென்றும், ஜனாதிபதியும், பிரதமரும் தத்தமது கட்சியினருக்கு அறிவுறுத்தல்களை விடுத்து அதற்கு தயாராகுமாறும் கூறிவருகின்றனர்.
அவ்வாறு உள்ளுராட்சித் தேர்தலோ, மாகாணசபைத் தேர்தலோ நடைபெறுமாக இருந்தால் அது நிச்சயமாக நல்லாட்சியை சீர்குலைக்கும். ஒவ்வொரு கட்சியினரையும் தமது தனித்துவக் கோஷங்களுக்குள் இழுத்துச் செல்லும். இதேவேளை நல்லாட்சியை கெடுத்துக்கொள்ள விரும்பாமல் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதே தமது விருப்பம் என்றும் ஜனாதிபதியும், பிரதமரும் கூறுகின்றனர்.
இவர்கள் இரண்டில் ஒன்றையே செய்ய முடியும். அதாவது ஆட்சியை தற்போது இருப்பதுபோல் தொடர்வதாக இருந்தால், தமக்குள்ளே முக்கிக் கொண்டும், முணகிக் கொண்டும் இருக்கவேண்டும். தேர்தல்களை சந்திக்கக் கூடாது. அல்லது தேர்தலை சந்திப்பதுடன் தமது வெற்றி, தோல்விகளை ஏற்றுக்கொள்ளவும், தேர்தல் களத்தில் தமது எதிரி யார் என்பதை தெளிவாக வரையறுத்துக்கொள்ளவும் வேண்டும். அப்படி வரையறை செய்தால் எதிரிகள் நல்லாட்சி நடத்த முடியாது.
பொது எதிரணியை தமது எதிரியாக வகுத்துக் கொள்வதாக இருந்தால், தேர்தல் களத்தில் தத்தமது கட்சியின் தனித்துவத்தை தியாகம் செய்து முட்டி மோதாமல், நாங்கள் நல்லாட்சியாளர்கள் என்பதால் எங்களில் யாருக்காவது மக்கள் வாக்குப் போடலாம் என்று இருக்க வேண்டும் அப்படி இருக்கப்போவதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு யார் அரசியல் எதிரி என்பதை தெரிவு செய்வதில் சிரமமில்லை. முதல் அரசியல் எதிரிக் கட்சி என்றால் அது சுதந்திரக் கட்சிதான். அதன் பின்னரே பொது எதிரணியும், ஜே.வி.பி போன்ற கட்சிகளாக இருக்க முடியும். சுதந்திரக் கட்சிக்கும் முதல் எதிரிக் கட்சி என்றால் அது ஐக்கிய தேசியக் கட்சியாகவே இருக்க முடியும். பொது எதிரணியை இரண்டாம் பட்சமாகவே பார்க்கமுடியும். ஆனால் பொது எதிரணியையே பிரதான எதிரத்தரப்பாக சுதந்திரக் கட்சி சிந்தித்து தடுமாறி நிற்கின்றது. இதுதான் யதார்த்தம் என்றிருக்கும்போது தேர்தல் களத்தைச் சந்திப்பது நல்லாட்சிக்கு நல்லதல்ல.
ஜனாதிபதியும், பிரதமரும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்பதால் அவர்கள் கூறும் இரண்டு விடயங்களுமே அவர்கள் சார்ந்த கட்சியினருக்கு குழப்பத்தை கொடுக்கும். ஆகவே தேர்தல் நடைபெறும் என்று தமது தலைவர்கள் கூறுவது வெறும் பொய் என்று அர்த்தப்படுத்த வேண்டும் அல்லது நல்லாட்சி தொடரும் என்று கூறுவது பொய் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏன் என்றால் இரண்டும் சமாந்திரமாக நடைபெறுவதற்கு வாய்ப்புக்கள் இல்லவே இல்லை.
இந்த நிலையில் நல்லாட்சியைப் பொறுத்தவரை பொருளாதார வீழ்ச்சியும், பொது எதிரணியின் விஸ்வரூப எழுச்சியும், நல்லாட்சியின் உற்ற பங்காளிகளான ஜே.வி.பியினரின் எதிர் விமர்சனங்களும், நல்லாட்சிக்கு காலக்கெடு விதிக்கப்போவதாக சூளுரைக்கத் தொடங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எச்சரிக்கைகளும், வில்பத்து விவகாரத்தைத் தொடர்ந்து நல்லாட்சி மீது விமர்சனங்களை வீசத் தொடங்கியிருக்கும் முஸ்லிம் கட்சிகளின் முரண்பாடுகளுமே பிரதான பிரச்சினைகளாக இருக்கின்றன.
இவற்றை சமாளிக்க முடியாமல் நல்லாட்சியின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் விழி பிதுங்கிப்போய் இருக்கின்ற நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதும், அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குப் போவதென்பதும் தேவை இல்லாத விடயங்களாகும்.
புதிய அரசியலமைப்பில் தனியே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது மட்டுமல்லாது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பது என்பதையும், தேர்தல் முறையை மாற்றுவது என்பதையும் இணைத்துக் கொள்வதும் நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதிக்கு அதிகாரத்தைக் குறைப்பது என்பதில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. நல்லாட்சியில் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டமே ஜனாதிபதியை கட்டிப்போட்டுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்பட்டால், இலங்கையில் ஜனாதிபதி என்பவர் பொம்மையாகவே இருக்க வேண்டும்.
அப்படி ஒரு நிலைமை ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஏற்படுமாக இருந்தால் அவரால் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பதும், கட்சியை கட்டுப்படுத்துவதும் முடியாத காரியமாகிவிடும். முன்னைய தலைவர்களை விடவும் சுதந்திரக் கட்சியை சக்திமிக்கதாக வளர்த்தெடுத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதால், தற்போது சுதந்திரக் கட்சியாக ஜனாதிபதியுடன் இருப்பவர்களும் மகிந்தவின் தலைமைத்துவத்துக்கு எப்போது வேண்டுமானாலும் கட்டுப்படுகின்றவர்களாகவே இருப்பார்கள் என்ற கருத்து இருக்கின்ற நிலையில், அதிகாரங்களை இழந்து பொம்மை ஜனாதிபதியாக இருப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பமாட்டர்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேர்தல் திருத்தத்தையும், ஜனாதிபதி அதிகாரக் குறைப்பையும் எப்பாடு பட்டேனும் நிறைவேற்றியே தீருவது என்பதில் தீவிரமாக இருக்கின்றார். புதிய அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்திய சாதனையை பதிவு செய்ய வேண்டும் என்ற உறுதியையும் பிரதமரிடம் காணமுடிகின்றது. ஆனால் பிரதமரின் கனவு நிறைவேறப்போவதில்லை.
நல்லாட்சி அரசாங்கம் பல முனைகளிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால் இப்போது இலங்கையில் என்ன நடக்கின்றது என்று ஜனாதிபதிக்கும் தெரியாது. பிரதமருக்கும் தெரியாது. அமைச்சரவை கூட இயந்திரத்தனமாகவே நடந்து முடிகின்றது.
நல்லாட்சியை ஏற்படுத்தியவர்களே இப்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். மக்களுக்க பதிலளிப்பவராக பிரதமர் செயற்படுவதில்லை என்றும், ஜனாதிபதியின் கையெழுத்துடனான ஒரு கடிதத்துக்கு கிராம சேவையாளர் கூட மதிப்பளிப்பதில்லை என்றும் கூறுமளவுக்கு அரசாங்கத்தின் ஆட்சி முறைமை இருக்கின்றது. இந்த நிலையில் நல்லாட்சியை கவிழ்த்து வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது என்று மஹிந்த ராஜபக்ஷவும், கள்ளர்களைப் பிடிக்கப்போவதாகக் கூறியவர்களே பெருங்கள்ளர்களாகி இருக்கின்றார்கள் என்று அரசாங்கத்தின் பங்காளியான ஜே.வி.பியினரும் பரிகாசம் செய்கின்ற நிலையானது பரிதாபமாகும்.