இரட்டை இல்லை சின்னத்தை பெற அ.தி.மு.க. கட்சியில் உள்ள 1½ கோடி தொண்டர்களின் ஆதரவை பெற இரு அணிகளும் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 2 ஆக பிளவுபட்டு நிற்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டப்படி செல்லாது என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
இதையடுத்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இரு தரப்பினரும் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தது.
இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை யார் பெறுவது என்ற போட்டி ஏற்பட்டது.
கடந்த மாதம் 22-ந்திகதி தேர்தல் ஆணையம் இரு தரப்பையும் அழைத்து பேசியது. அந்த விசாரணை முடிவடையாததால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது.
அ.தி.மு.க. கட்சி பெயர், கொடியை பயன்படுத்தவும் இரு அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இறுதி தீர்ப்பு வரும் வரை வெவ்வேறு கட்சி பெயர், சின்னங்களில் போட்டியிடும்படி இரு அணிகளையும் கேட்டுக்கொண்டது.
தேர்தல் ஆணைய அறிவிப்புபடி சசிகலா அணி அ.தி.மு.க. அம்மா கட்சி என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும், ஓ.பி.எஸ். அணி, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி என்ற பெயரில் இரட்டை விளக்குகள் கொண்ட மின் கம்பம் சின்னத்திலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்தன.ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகரில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இப்போது அ.தி.மு.க. அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் அ.தி.மு.க. கட்சி சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதே போல் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் தங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். அ.தி.மு.க. கட்சியில் 1½ கோடி தொண்டர்கள் உள்ளதால் அவர்கள் ஆதரவை பெற இரு அணிகளும் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.
இப்போது அ.தி.மு.க. கட்சி தங்கள் பக்கம்தான் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தில் நிரூபிக்க கட்சிக்காரர்களின் உறுப்பினர் அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்து, நோட்டரி வக்கீல் மூலம் ‘அபிடவிட்’ எழுதி ஆவணங்களை தயார் செய்யும் பணியில் இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு தொண்டர் பெயரிலும் ‘அபிடவிட்’ தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஓ.பி.எஸ். அணியை பொறுத்தவரை ஏற்கனவே 40 லட்சம் பேருக்கு மேல் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த எண்ணிக்கையை 1 கோடியாக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு தொண்டர் பெயரிலும் உள்ள உறுப்பினர் அடையாள அட்டையை சேகரித்து ஆவணங்களை தயாரித்து வருகின்றனர்.
இது போல் சசிகலா தரப்பினரும் ஒவ்வொரு தொண்டரிடமும் உறுப்பினர் அடையாள அட்டையை வாங்கி ஆவணங்கள் தயாரித்து வருகின்றனர்.
வருகிற 17-ந்தேதி இந்த ஆவணங்களுக்கான கடிதங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க உள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு விசாரணை தொடங்கும் என தெரிகிறது. இந்த விசாரணை சில மாதங்களுக்கு நீடிக்கும். அதன் பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியவரும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற மற்றொரு புகார் தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ளது. இந்த புகாரை மைத்ரேயன் எம்.பி., சசிகலா புஷ்பா, கே.சி.பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் கமிஷனில் கொடுத்திருந்தனர்.
இந்த விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. இதுபற்றி தேர்தல் ஆணையம் விரைவில் விசாரிக்க உள்ளது.
இதில் ஒருவேளை சசிகலா நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தால் அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் பதவியும் செல்லாதாகிவிடும்.எனவே கட்சியின் எதிர் காலம் தேர்தல் கமிஷன் கையில் உள்ளது.