முருகன் தமிழர்களின் இந்துக் கடவுள்களில் முக்கியமானவர். இந்துமதத்தில் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார்.
தமிழகத்தை பொறுத்தவரையில், இப்போது அம்மன் வழிபாடுகள் அதிகரித்துள்ளன. விநாயகர் வழிபாடும் சற்று ஓங்கி இருக்கிறது. ஆனால், முன்பு முருகர் வழிபாடுதான் முதன்மையாக இருந்துள்ளது.
தமிழகத்தில் அறுபடைவீடு ஆன்மிகத்தில் மிகவும் பிரபலமானது. அது தமிழகம் பரவலாக பழமையான 6 முருகன் கோயில்களை கொண்டது. அந்த கோயில்களுக்கு மகத்தான புராண வரலாறுகள் உண்டு.
மக்கள் நம்பிக்கைக்குரிய முருகனின் மகிமை இன்னும் இருக்கிறது. இறைவன் அருள்பாலித்த விதங்களை கதைகளாகவும் கதாகாலட்சேபங்களாகவும் மக்களுக்கு எடுத்துரைப்பதே தமிழகத்தில் ஒரு பெரிய மரபாக இருந்துள்ளது.
அறுபடைவீடுகள்:
திருப்பரங்குன்றம்
இங்குதான் முருகன் தெய்வானையை மணந்து கொண்டார். அதனால், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் (அ) திருச்சீரலைவாய்:
கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயில் சூரபத்மனை வதம்செய்ததன் அடையாளமாக அமைந்தது.
திருவாவினன்குடி (அ) பழனி மலை:
நாரதர் கொடுத்த ஞானப்பழத்தை சிவனும் பார்வதியும் அண்ணன் கணபதிக்கு கொடுத்துவிட்டதால் கோபம் கொண்டு தனியாக நின்ற இடம் பழனிமலை. ஔவை ஞானப் பழமே நீ என கூறியதே பழநி ஆனது.
திருவேரகம் (அ) சுவாமிமலை:
முருகனிடம் பிரம்ம மந்திரத்தை கேட்பதற்காக, சிவனே சீடனாக இங்கு அமர்ந்ததால், முருகன் தகப்பன் சுவாமி, சுவாமி குருநாதன் எனப் போற்றப்பட்டார்.
திருத்தணி (அ) குன்றுதோறாடல்:
முருகன் குறத்திப்பெண்ணான வள்ளியை காதலித்து, காந்தர்வ மணம் புரிந்த இடம் திருத்தணிகை.
பழமுதிர்ச்சோலை:
முருகன் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து, புலமைச் செறுக்குடைய ஔவைக்கு சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என பாடம் புகட்டிய இடம். இத்தலம் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
முருகன் உருவான புராணம்
சிவபெருமான் தனது ஆறுமுகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பை வெளியிட அதை வாயுபகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக மாறி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர்.
பிறகு, அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகம் மற்றும் பன்னிரு கைகளுடன் முருகன் தோன்றினார். என இந்து சமய நூல்கள் கூறுகின்றன.
குடும்பம்:
கணங்களின் அதிபதியான கணபதி, முருகருக்கு அண்ணனாகவும் வைணவக் கடவுளான திருமால் மாமனாகவும் இவரின் குடும்ப உறவுகள் விரிகிறது. மேலும், முருகனுக்கு இந்திரனுடைய மகளான தெய்வானை குறத்திப் பெண்ணான வள்ளி என இரண்டு மனைவிகள் உண்டு. சமய நூல்கள் மனிதர்களுடைய குடும்பம் போலவே கடவுளர்களையும் பாவித்துக் கூறுகின்றன.
இறைவனுக்கு வகுத்த மரபில் இரண்டு மனைவிகள் ஏற்படுத்தியிருப்பது ஆணாதிக்கச் சிந்தனை காலத்தில் தவறாக கருதப்படவில்லை. அதுபோல முருகனுக்கு வாரிசு பற்றிய புராணங்களும் இல்லை.
பழங்கால முருக வழிபாடு:
’முருகு’ என்றால் அழகு என்று பொருள். ஆதிகாலத்திலிருந்து தமிழர்கள் வழிபாட்டில் முருகன் இருந்து வருவதால் தமிழர் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
தமிழில் கூறும் ஐந்து பிரிவான நிலங்களில் மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் கடவுளாவார். சேயோன் என அவர்கள் வழிபட்டதை பின்னாளில் சைவ சமயம் தன்னோடு இணைத்துக்கொண்டது. பழங்காலத்தில் கௌமாரம் எனும் தனி மதமாக முருகன் வழிபாடு இருந்துள்ளது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தமிழர்கள் மலைமீது முருகன் கோயிலை கட்டிவைக்கும் பண்புடையவர்கள். திருப்பதியும் தமிழர்கள் கட்டியது அங்கு இருக்கும் மூலவர் முருகன் என்பதும் சான்றுகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேறுபெயர்கள்:
குமரன், சரவணன், குகன், வேலன், சேனாதிபதி, சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், ஆறுமுகன், சண்முகன், சுப்பிரமணியன், தண்டாயுதபாணி, மயில்வாகனன், செந்தில்நாதன், வேலாயுதம், சிவகுமரன் என இன்னும் பல காரண பெயர்கள் உண்டு.
பழமொழிகள்:
‘வேலை வணங்குவதே வேலை’
’கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை’
’கந்தன் பாதம் கனவிலும் காக்கும்’
’வேலிருக்க வினையுமில்லை, மயிலிருக்க பயமுமில்லை’
’செந்தில் நமக்கிருக்க சொந்தம் நமக்கெதற்கு’
‘பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?’
நூல்கள்:
கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட கந்தபுராணம். நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை, சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் களிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்ற நூல்கள்.
விழாக்கள்:
கார்த்திகை மாத கார்த்திகை திருநாள் முருகனுக்கு விசேஷமானது, வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் முருகனின் ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மனை அழித்ததின் நினைவாக கந்த சஷ்டி திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வழிபடும் முறைகள்:
முருகனின் ஆலயங்களுக்குச் சென்று காவடி, பால்குடம், அலகு குத்துதல், திருமுடி இறக்குதல், பாத யாத்திரை என பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
முக்கியமான அடியவர்கள்:
அகத்தியர், நக்கீரர், ஔவையார், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், கிருபானந்தவாரியார்.
தமிழர்களே பக்தர்கள்:
தமிழகத்தில் மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என தமிழர்கள் வாழும் பல வெளிநாடுகளில் பிரபலமான முருகர் கோயில்கள் உண்டு. ஆனாலும், பிற மொழிக்காரர்களான இந்துக்களில் கூட முருகனை வணங்கும் ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது.
தமிழர்களுக்காக மட்டுமே வாழ்ந்தால் வேற்று மொழிக்காரர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். அப்படி மற்றவர்கள் ஒதுக்குகிற நோக்கத்தின் அடிப்படை புரியாமலே பிறகு, தமிழர்களும் ஒதுக்குபவர்களோடு சேர்ந்துகொள்வார்கள்.
இந்த தமிழர்களின் குணம் தலைவர்களை ஏற்றுக்கொள்வதில் மட்டுமல்ல, கடவுள் முருகனை ஏற்கிற விதத்திலும் தெளிவாகி இருக்கிறது.