பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?’, `பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?’… பனை மரம் பற்றி இதுபோன்று ஏராளமான பழமொழிகள் உள்ளன. பனை மரம்… இலை முதல் விதை, பழம் என அதன் அனைத்து உறுப்புகளும் மனிதனுக்கு நலம் தரக்கூடியவை. அதனால்தான் தமிழக அரசின் மாநில மரம் என்ற பெருமையை பனைமரம் கொண்டுள்ளது. பனைமரத்தை பத்திரகாளியின் அம்சமாகக் கருதி வணங்கி வருகிறார்கள். சிலர் வேரியம்மன் என்ற பெண் தெய்வமாகவும் வணங்கி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல திருக்கோயில்களில் பனைமரம் தலவிருட்சமாகவும் உள்ளது. நுங்கு, பதநீர் போன்றவை தமிழரின் உணவுகள். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பனை மரத்தொழில் பரவலாகக் காணப்படுகிறது.
ஆண் – பெண் பனை:-
பனையில் ஆண் பனையை அலகுப்பனை என்றும், பெண் பனையை பருவப்பனை என்றும் சொல்கிறார்கள். பெண் பனையிலிருந்துதான் நுங்கு கிடைக்கும். ஆனால், ஆண், பெண் இரண்டு பனைகளில் இருந்தும் பதநீர் எடுக்கலாம். யதார்த்தம் இப்படியிருக்க பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் அதன்பிறகு நுங்கு கிடைக்காது. அப்படி நுங்கு கிடைக்காவிட்டால் பனம் பழம் கிடைக்காது.
சத்துகள் நிறைந்தது:-
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பனை நுங்கில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் உலோக உப்புகள், வைட்டமின் சி, சர்க்கரைச் சத்து போன்றவை உள்ளன. கோடை வாட்டி எடுக்கும் இந்தத் தருணத்தில் உடல் சூட்டைப் போக்கவும் வெம்மை நோய்களில் இருந்து காத்துக்கொள்ளவும் என்னென்ன ஏதேதோ பானங்களையும், செயற்கைக் குளிரூட்டிகளையும் அருந்துகிறோம். பனை நுங்கு, கோடைக்கு ஏற்ற நல்லதொரு உணவுப்பொருளாகும். இது உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்குவதுடன் வைட்டமின் பி, சி போன்ற சத்துகள் இதில் நிறைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
பனைமரத்தின் காயை வெட்டினால் அதன் உள்ளே நுங்கு கண்களைப்போல தனித்தனியாக இருக்கும். இதை அப்படியே கைவிரலால் அழுத்தி எடுத்துச் சாப்பிடலாம். பெரும்பாலும் மூன்று நுங்குகள் இருக்கும். நுங்கின் மேல்தோல் துவர்ப்புத்தன்மையுடன் இருக்கும். சுவைக்கு அடிமைப்பட்ட நாம் உடனே தோலை நீக்கிவிட்டு வெறும் சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவோம். இப்படி வெறும் சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும். சிறு குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுத்தால் அவர்களுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் அவற்றை நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்குக்கூட ஜீரணமாகாது என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. இளம் நுங்கே சாப்பிடத் தகுந்தது.
அம்மைநோய்க்கு மருந்து:-
பனை நுங்கு அம்மை நோயால் அவதிப்படுபவர்களுக்கு நல்லதொரு மருந்தாகும். அம்மை நோய் பாதித்தவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, குடலில் உள்ள சிறு சிறு புண்களும் ஆறும். கோடையில் வியர்க்குரு தொல்லையால் அவதிப்படுபவர்கள் பனை நுங்கை சாப்பிடுவதோடு, வியர்க்குருவின் மேல் தடவி வருவதன்மூலமும் நிவாரணம் கிடைக்கும். இது பசியைத்தூண்டுவதோடு, குமட்டலைக் கட்டுப்படுத்தி நீர்வேட்கையைப் போக்கும் அற்புத மருந்தாக செயல்படுகிறது. பனைமரத்தில் நுங்கு பிஞ்சாக உருவாகும் முன்னர், அதை நசுக்கி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவர். பின்னர் அதன் நுனிப்பகுதியை லேசாக அறுத்து விடுவர். இவ்வாறு தினமும் சிறிதளவு அது அறுக்கப்படும். அதில் இருந்து சொட்டு சொட்டாக ஒருவகை திரவம் வடியும். அதை மண்பானையில் சேகரிப்பார்கள். சொட்டு சொட்டாக வடியும் அந்த திரவத்தை சேகரிக்கும் பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவினால் கிடைப்பது பதநீர். (அவ்வாறு சுண்ணாம்பு தடவாவிட்டால் அதன் தன்மை மாறி ‘கள்’ளாகிவிடும்.) கோடைக்காலங்களில் பிரசித்தி பெற்றது, பதநீர். வெயிலின் வெம்மையால் தவிப்போருக்கு பதநீர் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது. ஆண் பனை, பெண் பனை இரண்டில் இருந்தும் பதநீர் இறக்கப்படுகிறது. அமிலத்தன்மை ஓரளவு காணப்படும் பதநீர் சுவையாக இருக்கும். இதில் காலை பதநீரும், மாலை பதநீரும் அருந்துவதற்கு இதமாக இருக்கும். கோடைக்காலங்களில்தான் பெரும்பாலும் பதநீர் பெறப்படுகிறது. மழை மற்றும் காற்று காலங்களில் பதநீரின் தரம் குறைந்து காணப்படும்.
பதநீரை வெறுமனே கோடைக்கு ஏற்ற இயற்கைக் குளிர்பானம் என்று சொல்லிவிட்டு போய்விட முடியாது. இதில் கால்சியம், சர்க்கரைச் சத்து, தயாமின், வைட்டமின் சி, புரதச்சத்து மற்றும் நிகோனிக் அமிலம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. ஆக, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த பதநீரைக் குடிப்பதால் வயிற்றுப்புண், தொண்டைப்புண், உடல்சூடு, வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறலாம். 40 நாட்கள் தொடர்ந்து பதநீர் குடித்து வந்தால் மேக நோய்கள் விலகும். ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் பாடாய்ப்படுத்தி வரக்கூடிய மேக நோய்களுக்கு பதநீர் நல்லதொரு மருந்தாகிறது. இவைதவிர உடல்வீக்கம், நெஞ்செரிச்சல், பித்தம் தொடர்பான கோளாறுகள், கல்லீரல் – மண்ணீரல் வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது பதநீர். சிறுநீர் தொடர்பான நோய்களுக்கு பதநீர் நல்ல பலன் தரும்.
பதநீர்
கால்சியம் சத்து:-
பதநீரில் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் கால்சியம் சத்தும் கிடைக்கிறது. இது பற்களை வலிமையாக்குகிறது. பதநீர் பல் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுப்பது, ரத்த சோகையை நீக்குவது போன்ற பணிகளைச் செய்கிறது. முற்காலங்களில் பதநீர் அருந்தி வந்த பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் தொந்தரவுகள் எதுவும் வராமல் இருந்தன. மேலும் அவர்களுக்கு மகப்பேறு காலங்களில் வரும் பிரச்னைகளை நீக்கி குழந்தை பெற்றபிறகு அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருந்தன. இதனால் தாயும், சேயும் நலமாக இருந்தனர். இதுதவிர கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய மூட்டுவலி, பற்களில் ஏற்படும் பிரச்னைகள் எதுவும் அவர்களை நெருங்காமல் இருந்தன. அதன் அடிப்படையில் இந்த பதநீரை அருந்துவதன்மூலம் தாயும் சேயும் நலம் பெறலாம். பதநீரை தொடர்ந்து அருந்தி வரும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகள் நீங்கும். குறிப்பாக விந்தணுக்களில் உள்ள உயிரணுக் குறைபாட்டை சரி செய்யும். நரம்பு மண்டலம் பலம் பெறுவதோடு தலைமுடி நரைப்பது தள்ளிப்போகும். மற்றபடி பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றுக்கும் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.