புகைப்பட மோகத்தில் மற்றொரு உயிர் பறிபோனது. இச்சம்பவம் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படாத மானிலம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
பாபுராம் ஜாகர் என்பவர் நாகப் பாம்புடன் படம் எடுக்க விரும்பினார். இதற்காக, பாம்பாட்டி நாகப் பாம்பை பாபுராமின் கழுத்தைச் சுற்றிப் போட முயற்சித்தார். இதன்போது பாம்பு பாபுராமின் தலையில் கொத்தியது.
பாம்பு கொத்தியதை மிகத் தாமதமாக உணர்ந்த பாபுராம், இதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்று பாம்பாட்டியைக் கேட்டார். அதை பாம்பாட்டி மறுத்தார். எனினும் சிறிது நேரத்தில் மயக்கமாக உணர்ந்த பாபுராம் பாம்பாட்டியிடம் இதுபற்றிக் கூறினார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அருகே இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றார் பாம்பாட்டி. இதற்கிடையில், பாபுராம் சுய நினைவிழந்து கீழே விழவே, பயந்துபோன பாம்பாட்டி பாபுராமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கொடிய விஷம் ஏறியதால் மரணித்ததாகத் தெரிவித்தனர்.
பாம்பு கடித்து ஒரு மணிநேரத்துக்குள் பாபுராமின் உயிர் பறிபோனது குறிப்பிடத்தக்கது.