சாக்கடைத் துளையினுள் சிகரட்டை வீசியவர், சாக்கடை வெடித்து காயங்களுக்குள்ளான சம்பவம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றிய காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
காணொளியின்படி, இச்சம்பவம் கடந்த மாதம் 29ஆம் திகதி காலை சுமார் பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியோரம் இருக்கும் சாக்கடைத் துளை ஒன்றுக்கு அருகில் வரும் நபரொருவர், தன் கையில் இருந்த சிகரெட்டை அணைக்கும் விதமாக சிகரெட்டை அந்தத் துளையினுள் போடுகிறார். உடனடியாக அந்தச் சாக்கடைப் பகுதி வெடித்துச் சிதறுகிறது. தெய்வாதீனமாக அந்த நபர் சிறு காயங்களுடன் எழுந்து நிற்க முயல்கிறார்.
இந்த வெடிப்புச் சம்பவத்துக்குச் சற்று முன், மற்றொரு நபர் கழிவுகள் சிலவற்றைக் கொணர்ந்து அந்தத் துளை வழியாக அகற்றுவதும் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் அந்தத் துளையினுள் இட்டது வெடிபொருளாக இருக்கலாம் என்றும், இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.