ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இடத்தை குறிவைத்து நேற்று மாலை அமெரிக்கா அதிக சக்திவாய்ந்த குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சுரங்கப்பாதை மீது ஜிபியு – 43பி எனப்படும் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத பேரழிவு ஏற்படுத்தும் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
அனைத்து குண்டுகளின் தாய் என கருதப்படும் இந்த வெடிகுண்டு மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் முதல் போர்முறை தாக்குதல் இது என்று பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறினார்.
அமெரிக்க ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமை அடைவதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். அமெரிக்க செனட் உறுப்பினர்களும் டிரம்பின் நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு இது ஒரு தெளிவான தகவலை அனுப்பியிருக்கும் என்று செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.