முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவரின் அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்ற சசிகலாவை பிடிக்காதவர்கள் தீபாவை சந்தித்து ஆதரவு அளிக்க தொடங்கினர். இதனால், உற்சாகம் அடைந்த தீபா, எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கினார்.
அந்தப் பேரவையின் செயலாளராக தன் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கும் ஏ.வி.ராஜாவையும், பேரவையின் தலைவராக அவர் மனைவி சரண்யாவையும் தீபா நியமித்தார். இதனால், ஆதரவாளர்கள் பலர் அதிருப்தி அடைந்தனர்.
குறிப்பாக, தீபாவின் கணவர் மாதவன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தான் பரிந்துரை செய்யும் நபர்களுக்குத்தான் பதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வீட்டு சண்டை வீதிக்கு வந்தது
ஆனால், இதை ஏற்காத தீபா கணவர் மாதவனை ஓரம் கட்டத் தொடங்கினார். மாறாக, கார் டிரைவர் ஏ.வி.ராஜாவின் ஆலோசனைப்படியே பேரவையை வழிநடத்த தொடங்கினார். இதனால், மாதவனும் தீபாவை பிரிந்து சென்றார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தீபா, வேட்புமனு தாக்கலின்போது, தனது கணவர் மாதவனின் பெயரை வேட்புமனுவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இந்த சம்பவம், இருவருக்கும் இடையேயுள்ள இடைவெளியை வெளிச்சம் போட்டு காட்டியது.
இதற்கிடையே, மாதவனும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானத்தில் அமர்ந்தார். பின்னர், தான் தனியாக கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். விரைவில், கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் கூறினார். இதனால், வீட்டு சண்டை வீதிக்கு வந்து அம்பலமானது.