ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை பஞ்சராக்கியது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி 16.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. கேப்டன் கவுதம் கம்பீர் 72 ரன்களும் (12 பவுண்டரி), சுனில் நரைன் 37 ரன்களும் (18 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், கம்பீருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விஷயமாகும். கிறிஸ்லின் காயமடைந்ததால் கம்பீருடன், ராபின் உத்தப்பா இறங்குவார் என்று எதிர்பார்த்த வேளையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் முறையாக சுனில் நரைன் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார். அவரும் அதிரடியில் மிரள வைத்து விட்டார்.
சுனில் நரைனுக்கு புகழாரம் சூட்டியுள்ள கம்பீர் கூறுகையில், ‘சுனில் நரைனின் பேட்டிங் திறமையை பற்றி நிறைய பேர் குறைவாக மதிப்பிடுகிறார்கள். அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது எனக்கு எப்போதும் சவுகரியமாக இருக்கிறது. அவர் தரமான பந்து வீச்சாளர். அதே போல் அதிரடியான பேட்டிங்குக்கும் அவரை பயன்படுத்த முடியும்.
அவர் விளையாடிய விதத்தை பார்த்து சில பேட்ஸ்மேன்கள் பெருமைப்பட வேண்டும். அவரது சில ஷாட்டுகளை பாருங்கள். மெகா சிக்சர் அடிப்பது எப்படி என்பதை அவரிடம் இருந்து நான் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து சாதகமான முடிவுகள் கிடைத்தால், சுனில் நரைனை நீங்கள் தொடக்க வீரராக பார்க்கலாம்’ என்றார்.