திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுக்க “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்” எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்கியுள்ளார். இந்த திரைப்பட பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல், பாக்கியராஜ், சுந்தர்.சி, நாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, எவ்வுளவு சிறப்பாக நடித்தாலும் பாரதிராஜாவிடம் இருந்து வாழ்த்துக்களை பெற முடியாது. அவர் என்னை சிறந்த நடிகர் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டார். அவருக்கு என்னை பிடிக்கும், ஆனால் பிடிக்காது என்றும் கூறினார். அவரது திரைப்பட கல்வி நிலையத்தில் மாணவர்கள் பங்கேற்று கலைத்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
முன்னோட்ட திரையரங்கத்தை திறந்து வைத்த நடிகர் கமலஹாசன் பேசியதாவது, ஒருவன் எவ்வளவு மோசடாக நடித்தாலும், பாரதிராஜாவிடம் பயிற்சி பெற்றால் சிறந்த கலைஞனாக உருவாக முடியும். தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது தான் ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை. அந்த வகையில் பாரதிராஜா ஒரு முனிவராக காட்சியளிக்கிறார் என்று கமல் கூறினார்.
நடிகர் நாசர் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் தொழில்நுட்ப ஈடுபாடு அதிகமாகியிருப்பதால், கலை அதன் தன்மையை இழந்து வருகிறது. பாரதிராஜாவின் கல்வி நிலையம் மூலம் கலைத்தன்மை மீண்டும் மேன்மை அடையும் என்று தான் நம்புகிறேன் என்று பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.