பொதுவாகவே, ஆதிக்க சக்திகள் தங்கள் வலிமைக்கு ஏற்ப வரலாற்றை திருத்தி எழுதுகின்றன என்பது நம் வரலாற்றைப் படித்து பார்த்தால் புரிய வரும். தமிழர்களின் பெருமையையும் சரி, உலக வரலாறுகளையும் சரி பல்வேறு வகையில் திரித்து எழுதி மக்கள் மனதில் நம்ப பதிந்துவிட்டனர். அந்த வகையில் சபரி மலை குறித்தும் ஒரு பிறழ்ச்சி கருத்து வந்துள்ளது. அதுதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
சபரிமலை என்பது கேரள மாநிலத்திலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற அரக்கியை வதம் செய்த பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடம் சபரிமலை என வழங்கப்படுகிறது.
18 மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.
மேலும் சபரிமலை பற்றியும், ஐயப்பனை பற்றியும் பல்வேறு கதைகள், படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அங்கு இருப்பது ஐயப்பனே இல்லை அது புத்தர் தியானம் செய்த இடம் என்று வெளியான தகவல் உங்கள் காதுக்கு எட்டியதா?
ஐயப்பனாக மாறிய புத்தர்
சில வருடங்களுக்கு முன் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, சபரிமலையில் இருப்பது ஐயப்பன் இல்லை அது புத்தர் என்ற செய்தி பரவியது.
புத்த மதம் தனியான மதமாக அறியப்பட்டாலும், அது இந்து மதத்திலிருந்து பிரிந்த மதமாகத்தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஒரு சில இந்து கோட்பாடுகளைத் தவிர்த்து தோற்றுவிக்கப்பட்டதுதான் புத்தமதமாகும்.
புத்த கோயிலாக இருந்த இடம் எப்படி ஐயப்பன் கோயிலாக மாறியது. சிலை எப்படி மாற்றப்பட்டது என பல்வேறு கருத்துக்கள், கேள்விகளாக துளைக்கப்பட்டன.
41 நாள்கள் விரதம் முறை
41 நாள்கள் விரதம் இருக்கும் முறையானது புத்த மதத்தில் கடைபிடிக்கப்படும் வாழ்க்கை நெறிமுறை மாற்ற பயிற்சியாகும். மன அழுத்தம் சோர்வு, சந்தோசம், சுகபோக உணவுகள், கவர்ந்திழுக்கும் உடைகள் என அனைத்தையும் 41 நாள்கள் கடைபிடித்தால் அதுவே பழக்கமாகிவிடும் என்கின்றனர்
சுவாமியே சரணம் ஐயப்பா
ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பரிக்க ஆனந்த கூச்சலிடும் சுவாமியே சரணம் ஐயப்பா என்பதிலுள்ள சரணம் எனும் சொல் புத்த வழிபாட்டுக்குரியது என்ற திடுக்கிடும் குண்டை தூக்கி எரிகின்றனர்
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி என்ற புத்த வாசகத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் ஐயப்பனின் சுவாமியே சரணம் ஐயப்பா என்பது.
இதையெல்லாம் தவிர்த்து புத்தர் தான் இங்குள்ளார் என அவர்கள் சொல்லும் காரணம் மிகவும் ஆச்சர்யமளிக்கிறது. புத்தர் தனது கருத்துக்களின்படி, ஒரே இடத்தில் வாழ்ந்து தியானம் வழிபடவேண்டும் என்பதை ஆழ்ந்து நம்பினார். அதன்படி பார்க்கையில், சபரிமலை அடர்ந்த காடுகளுக்குள், மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது. அப்படியானால் வீடு போன்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளதற்கு அது நிச்சயமாக புத்தர்தான் என்கிறார்கள்.
இந்தியா முழுவதும் சாதி வேறுபாடுகள் நிறைந்திருக்கும்போது, சபரிமலை மட்டும் சாதி வேறுபாடுகளின்றி காணப்படுகிறது. இப்போதில்லை தொடங்கிய காலத்திலிருந்தே அப்படித்தான். அதற்கும் ஒரு காரணம் கூறுகின்றனர் அவர்கள்
புத்தரின் சாதி பாராமை.
இந்துமதம் சாதி பிளவுகளால் பிரிந்துள்ளதன்காரணமாகத்தான் புத்த மதம் என்ற ஒன்றை பலர் நம்பிச் சென்றனர். புத்தர் தனது போதனைகளில் பிரிவு என்பதில்லை மனிதர்கள் அனைவரும் சமமாக அன்பு செலுத்தப்படவேண்டியவர்கள் என கூறுகிறார். அப்படியானால் இது புத்தர் கோயில்தானே என்கின்றனர் எதிர் கருத்தாளர்கள்.
பதினெட்டு படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்து வந்தால் நம் மனதில் ஏற்படும் அமைதியையும், தெளிவையும் பாருங்கள். மற்ற தெய்வங்களைப் போலல்லாம் ஐயப்பன் அமர்ந்திருக்கும் விதமே நம்மை புத்துணர்ச்சியடைய செய்யும். ஆனால் இதைத்தான் அவர்கள் மற்றொரு கருத்தாக முன்வைக்கின்றனர். அதாவது புத்தர் தியானத்திலிருப்பதும் ஐயப்பன் அமர்ந்திருப்பதும் ஒரே மாதிரியாக இருக்கிறது.