சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆதிவாசிகள் சமூகத்திற்கு குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா அத்தோவுடனான சந்திப்பில் இது பற்றி ஆராயப்பட்டதாக, நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரவிதான தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஆதிவாசிகளின் தலைவர் இந்தச் சந்திப்பின்போது, தமது சமூகம் பற்றிய புள்ளிவிபரங்களை முன்வைத்தார். 6 மாவட்டங்களைச் சேர்ந்த 57 கிராமங்களில் ஆதிவாசி மற்றும் கலப்பு குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சம் பேர் வரை வசிக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைளை தீர்க்கும் வகையில், குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கையொன்றை, அமைச்சர் ஹக்கீம் உலக நீர் மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.