கனடாவில் இருந்து நாடு கடத்தும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழர் ஒருவர் குறைந்தது ஒரு மாத காலத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
31 வயதான சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவரே இவ்வாறு தடுத்து வைக்கப்படவுள்ளார். தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக அவர் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார்.
சிவலோகநாதன் தனபாலசிங்கம் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விசாரணைகள் கடந்த வாரமளவில் இடம்பெற்றன.
குடிவரவு மற்றும் அகதிகள் சபை அங்கத்தவரான Stéphane Morin முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின் போது, சிவலோகநாதன் தனபாலசிங்கம், விமானம் மற்றும் கனேடிய சமூகத்திற்கு ஆபத்தானவர் என அறிவிக்கப்பட்டது.
நாடு கடத்தலுக்கு இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் விமானத்திற்கு ஆபத்தானவர் எனவும், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதால் கனேடிய சமூகத்திற்கு ஆபத்தானவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விசாரணையின் போது சிவலோகநாதன் தனபாலசிங்கத்தின் மனைவியான கொலை செய்யப்பட்ட அனுஜா பாஸ்கரனே பிரச்சினைக்குரியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவர் குறித்து அடிக்கடி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும், பொலிஸாரை அழைப்பார் எனவும், சிவலோகநாதன் தனபாலசிங்கத்தின் மைத்துனி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சிவலோகநாதன் தனபாலசிங்கம் தன்னைகொடுமைப்படுத்தியுள்ளதாக தெரிவித்து கொலை செய்யப்பட்ட மனைவியால் பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் அகதிகள் சபை அங்கத்தவரான Stéphane Morin விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களின்படி தடுப்பு காவல் ஆய்வு விசாரணை அடுத்த மாதம் 11ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2004ஆம் ஆண்டு ஈழத்திலிருந்த கனடாவிற்கு அகதியாக சென்ற சிவலோகநாதன் தனபாலசிங்கம் 2011ஆம் ஆண்டு அனுஜா பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், 2012ஆம் ஆண்டு அனுஜா பாஸ்கரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சிவலோகநாதன் தனபாலசிங்கம் விசாரணைகள் இன்றி 56 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.