வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர்.
மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.
இதனால், மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது.
இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தபடியாகவே உள்ளனர்.
அன்காரா நாட்டு கடல் எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைந்து விடாமல் அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கே அகதிகளாக குடியேறி விடலாம் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது.
எனவே, ரத்தத்தை உறையவைக்கும் குளிர் காற்று, பசியால் அலையும் சுறா, திமிங்கலம் உள்ளிட்ட ராட்சத மீன்களின் தாக்குதல் மற்றும் பேரலைகளுக்கு மத்தியில் தங்களது உயிரைப் பணயம் வைத்து இவர்கள் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் இரண்டு லட்சம் குடியேறிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டபுறம்பாக நுழைந்துள்ளனர். இவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் துருக்கி வழியாக வந்துள்ளனர். கடல் பயணத்தின்போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்துகளில் சிக்கி கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய தரைக்கடல் வழியாக 16 ரப்பர் படகுகள் மற்றும் மூன்று மரப் படகுகளில் வந்து நடுக்கடலில் தத்தளித்த 2074 குடியேறிகளை இத்தாலி நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். ஒரு படகில் வாலிபர் கிடந்த வாலிபரின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டதாகவும் ரோம் நகரில் இருந்துவரும் செய்திகள் குறிப்பிடுகின்றன,
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 32 ஆயிரம் குடியேறிகளை தங்கள் நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளதாகவும், 650-க்கும் அதிகமானவர்கள் கடலில் விழுந்து காணாமல் போனதாகவும், பலியானதாகவும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.