புதிய ஜோடியுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் வெற்றிகளை குவிப்பேன் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சென்னையில் நேற்று தெரிவித்தார்.
சென்னையில் சானியா
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் ஆடை வடிவமைப்பு கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்த இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது:–
இந்த ஆண்டில் ஏற்றம், இறக்கம் இன்றி சீரான தொடக்கத்தை கண்டுள்ளேன். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி ஆட்டத்தில் (ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில்) விளையாடினேன். சில போட்டிகளில் (மியாமி, சிட்னி) இறுதிப்போட்டிக்கு முன்னேறினேன். ஒன்றிரண்டு போட்டிகளில் அரைஇறுதிக்குள் நுழைந்தேன். எனது குறைகள் என்ன என்பது நன்கு தெரியும். எப்பொழுதும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு மேலும் பட்டங்கள் வென்று சாதிக்க முயற்சிப்பேன்.
இதுவரை செக்குடியரசு வீராங்கனை பார்பரா ஸ்டிரிகோவாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வந்தேன். அவர் ஒற்றையர் பிரிவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் ஒரு வாரத்தில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவையும் சேர்த்து 9 ஆட்டங்கள் வரை விளையாட வேண்டி இருக்கிறது. இதனால் சீக்கிரம் சோர்ந்து போய் விடுகிறார். எனவே தான் எங்களால் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. இருவரது முன்னுரிமையும் வெவ்வேறாக இருப்பதால் பிரிவதற்கு இதுவே சரியான நேரம் என்று கருதி பிரிந்தோம். இனிமேல் நான் கஜகஸ்தான் வீராங்கனை யாரோஸ்லாவா ஷிவ்டோவாவுடன் இணைந்து இரட்டையர் ஆட்டத்தில் களம் இறங்க இருக்கிறேன்.
வெற்றி பெறுவோம்
ஷிவ்டோவாவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவர் சிறந்த வீராங்கனை, பழகுவதற்கு இனிமையானவர். அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருக்கிறார். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நீண்ட காலம் பிடிக்காது என்று நம்புகிறேன். ஷாட்களை அடிப்பதில் அவர் வலுவான வீராங்கனை. இருவரும் அனுபவித்து ஆடுவதுடன், போட்டியில் நல்ல முடிவையும் கொடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். விம்பிள்டன் போட்டி வரை இருவரும் நிச்சயம் இணைந்து விளையாடுவோம். அதன் பிறகு சீசன் முழுவதும் ஜோடியாக விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது.
ஒற்றையர் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்து கொண்டதாக நினைத்து வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்கிறீர்கள். ஆனால் என்னை பொறுத்தமட்டில் வருத்தம் எதுவும் கிடையாது. ஒற்றையர் ஆட்டத்தையும் சேர்த்து விளையாட உடல் ஒத்துழைக்காததால் அந்த முடிவை எடுத்தேன். அந்த நேரத்தில் அது கடினமாக முடிவாக இருந்தாலும், நான் எடுத்தது நல்ல முடிவாகும். இரட்டையர் ஆட்டத்தில் பெற்ற வெற்றியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் இரட்டையர் பிரிவில் ஏறக்குறையை 2 ஆண்டுகள் தர வரிசையில் முதல் இடம் வகித்தேன்.
பெண்கள் பாதுகாப்பு முக்கியம்
சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு முக்கியமான விஷயமாகும். காந்தி சொன்னது போல் எத்தனை மணியானாலும் ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக எங்கும் சென்று வர முடியும் என்ற நிலைக்கு இந்த சமூகத்தை மாற்ற வேண்டியது அவசியமானதாகும். ஒரு பிரபலமாக, குறிப்பாக ஒரு பெண் பிரபலமாக இருப்பது ரொம்பவே கஷ்டமானதாகும். எங்கு போனாலும் நம்மை சுற்றியும் பெருங்கூட்டம் கூடிவிடும். அதில் ஒருசில வக்கிர குணம் படைத்தவர்கள் உடலை எப்படியாவது தொட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை செய்வார்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கு இதுவரை இதுபோன்ற மிக மோசமான அனுபவங்கள் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் இது மாதிரியான செய்திகளை பார்க்கும் போது என்னை அறியாமலேயே அதிக கோபம் வந்து விடுகிறது.
இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.