வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று வீசியமையால், 38 வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தினால், வவுனியா களுக்குன்னமடுவ, பெரியக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே சேதமடைந்தன. எனினும், இந்த அனர்த்தத்தினால் எவருக்கும் சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீடுகளை இழந்தவர்கள் தங்களுடைய உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் மழையுடன் கூடிய கடுங்காற்றின் காரணமாக, 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி, பொன்னகர், பாதிபுரம் மற்றும் செல்வநகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில், 10 வீடுகளின் கூரைகளே இவ்வாறு காற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.
கடந்த 14 ஆம் திகதியன்று ஏற்பட்ட இவ்வனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தாங்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலருணவு மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் அறிவித்துள்ளன.