அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள், மீதொடமுல்ல குப்பை மேட்டை விட மோசமானவை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ம் திகதி புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற மீதொடமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்த 8 பேரின் இறுதிக்கிரியைகள் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஞானசார தேரர்,
“இந்த அனர்த்த சம்பவத்திற்கு கடந்த காலங்களில் ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும், அரசியல்வாதிகளும் பொறுப்புக்கூறவேண்டும். ஆகவே இதன் பின்னாவது இந்த கேவலமான அரசியல் முறையை நிறைவு செய்து நீலம், பச்சை, சிவப்பு என பிரித்து பார்க்காமல், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.