முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி நாளை மறுதினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். குறித்த பகுதிக்குள் பொதுமக்களுக்கு சொந்தமான கால்நடைகளும் உள்ளன.
இவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் பதிலளிக்காத நிலையில், வட்டுவாகல் – முள்ளிவாய்க்கால் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ள கடற்படை முகாமின் முன்பாக இக் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.