ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
4-வது தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இது போன்று நாங்கள் விளையாடினோம் என்றால், வெற்றி பெறுவதற்குரிய தகுதியான அணியாக இருக்க முடியாது. மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடுமையாக போராடினோம். ஆனால் இந்த ஆட்டத்தில் தோல்வியின் பாதையில் பயணிப்பது கண்முன்னே தெரிந்தது.
தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட அணிக்காக நாம் ஆடுகிறோம். ஏராளமான ரசிகர்களின் முன்னிலையில் களம் இறங்குகிறோம். எனவே இது மாதிரி சொதப்பாமல், வீரர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் தற்போதைய நிலைமையை மாற்றி வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.