சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் டோரா. நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி வெளிவந்த அந்த படத்தில் பவன் சர்மா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஷான். அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இஞ்சினியரிங் படித்து முடித்து நடிப்பதற்காக முயற்சி செய்தேன்.
இயக்குனர் மித்திரன் ஜவஹரை சந்தித்தேன். ஆடிசனில் தேர்வாகி ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில் இஷா தல்வார் காதலனாக அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய நேரம் நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படம் வெளிவருவதற்கு முன்பே ‘தங்கமகன்’ படத்தில் எமி ஜாக்சனின் பாய்பிரண்ட் வேடத்தில் நடித்த படம் வெளிவந்து என்னை பிரபலமாக்கியது. அடுத்து ‘கோ– 2’ படத்தில் வில்லன் வேடம்.
தற்போது நயன்தாராவுடன் ‘டோரா’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்தேன். பெரிய ஹீரோயினான நயன்தாராவை பார்ப்பதற்கே பல லட்சம் பேர் தவம் கிடக்கும்போது அவருக்கே நான் வில்லனாக நடித்தது எனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி விட்டது. இந்த படத்தை பார்த்த பிறகு புதிய இயக்குனர் சஜோ சுந்தர் இயக்கும் புதிய படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக பெரிய ரோலில் நடிக்கிறேன். தமிழ் ஹிந்தி என இரண்டு மொழிகளில் படம் தயாராகிறது. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
வில்லன் வேடம் தான் எனக்கு பிடிக்கும். அதற்குத்தான் எல்லா மொழி மக்களிடமும் வரவேற்பு இருக்கும். கடைசி வரை வில்லனாக நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் ஷான்.