ஐ.நா சபையின் பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ள வட கொரியா நாட்டிற்கு பிரித்தானிய அரசு சுமார் 4 மில்லியன் பவுண்டிற்கும் அதிகமாக நிதியளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா சபை, அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா சர்வதேச சட்டங்களை மீறி அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
வட கொரியாவின் இந்நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடையை விதித்துள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய நாட்டில் இருந்து வெளியான தகவல் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக வட கொரியா நாட்டிற்கு பிரித்தானிய அரசு சுமார் 4 மில்லியன் பவுண்டிற்கும் அதிகமாக நிதியளித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 7,40,000 பவுண்ட் தொகையை பிரித்தானிய அரசு அளித்துள்ளது.
வட கொரியாவின் வளர்ச்சி திட்டங்களுக்காகவும், இரு நாடுகளின் உறவுகளை பலப்படுத்தவும் இந்த நிதி அளிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கைக்கு அந்நாட்டின் முன்னாள் ராணுவ அமைச்சர் உள்பட முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சட்டங்களை மீறுவது மட்டுமில்லாமல், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் வட கொரியாவிற்கு நிதியுதவி அளிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், வட கொரியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் பிரித்தானிய அரசின் கொள்கை முடிவுகளை மாற்றிக்கொள்ளும் திட்டம் இல்லை என அந்நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.