“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது அது எனக்கும் மட்டுமான யுத்தம் அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச் சொல்லிக் கேட்கவில்லை. மாறாக இந்தியா தானே முன்வந்து பல்வேறு உதவிகளை செய்திருந்தது. சாதகமான வழிகள் ஊடாக பல உதவிகளை வழங்கியிருந்தது. உண்மையில் அது என்னுடைய போர் இல்லை. மாறாக இந்தியாவின் போர் என்று தான் சொல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை உட்பட பலரது கொலைகளின் பின்னணியில் புலிகள் இருந்ததன் விளைவாகவே இந்தியா இந்த யுத்தத்தை முன்னின்று செய்தது.
இது என்னுடைய போர் மட்டுமல்ல இந்தியாவினுடையதும் தான். மனிதாபிமான போர். இந்த தகவலை ஊடகங்களுக்குச் சொல்லி பரப்புரை செய்யவில்லை. போரில் சீனா மட்டுமல்ல பாகிஸ்தான், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் உதவி புரிந்திருந்தன என்றார்.