அங்குரங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட ரொக்வூட் தோட்டத்தில் மனைவியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அங்குரங்கெத்த பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் 48 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் தனது முதல் மனைவி வேலை வாய்ப்புப்பெற்று வெளி நாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் வலப்பனை மஹாஊவா தோட்டத்தைச் சேர்ந்த சுமித்திரா என்ற 28 வயதுடைய பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களாக குடும்பம் நடத்தி வந்ததில் மூன்று வயதில் ஆண் குழந்தையொன்றும் உள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர் பிறிதொரு பெண்ணுடனும் காதல் தொடர்பினை பேணி வந்ததாகவும் இதனால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் இருந்து வந்ததெனவும் தெரியவருகிறது
இந் நிலையிலேயே கடந்த பெப்ரவரி மாதம் சந்தேக நபருக்கும் குறித்த பெண்ணுக்குமிடையே சண்டை மூண்டதையடுத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டு வீட்டுக்குள் குழி தோண்டி புதைக்கப்பட்டதாக தெரிய வந்திருந்தது.
பொலிஸார் குறித்த வீட்டினை சோதனையிட்டு சந்தேகத்துக்கிடமான இடத்தை தோண்டிய பொழுதே கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி வலப்பனை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சுமித்திராவின் உருக்குலைந்த சடலம் மீட்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்ப்பாக நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதோடு தலை மறைவாக இருந்து வந்த பிரதான சந்தேக நபரை அங்குரங்கெத்த பொலிஸார் தேடி வந்த இந் நிலையில் குறித்த நபர் கடந்த 12 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அங்குரங்கெத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்போது சந்தேகநபர் வலப்பனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவுக்கமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.