காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை நினைத்து தினமும் கண்ணீருடன் வாழும் தமக்கு, தமது உறவினர்களின் நிலை தொடர்பில் அறிவிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 58வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தாயொருவரே மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமக்கு யாரேனும் உதவுவார்களா என நினைத்து மிகவும் வேதனையுடன் போராடி வருவதாக தெரிவித்த குறித்த தாய், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளிலுள்ள அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் முன்வந்து தமக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் இரவு பகலாக நடைபெற்று வரும் இப் போராட்டம் இரண்டு மாதங்களை எட்டியுள்ள போதிலும், இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமது போராட்ட வடிவத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.