அதிமுகவின் இரு பிரிவினரும் இணையும்பட்சத்தில் தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வராக யார் இருப்பது என்பது குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியானது சசிகலா- பன்னீர் செல்வம் தரப்பினர் என இரு அணியாக பிரிந்தது. மேலும், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக கட்சியின் சின்னம் மற்றும் கட்சி பெயர் முடக்கப்பட்டு, இரு பிரிவினரும் தொப்பி, மின்கம்பம் ஆகிய சின்னங்களில் ஆர்கே நகர் தேர்தலை சந்திக்க களமிறங்கினர்.
ஒருவரையொருவர் மாறி குறைசொல்லிக்கொண்டிருந்த நிலையில், தற்போது இரு அணிகளும் ஒன்றாக இணையப்பபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடந்தது.
இதில் மூத்த தலைவரும், எம்பியுமான தம்பிதுரையும் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் இரு அணிகளும் இணைவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சராக யார் இருப்பது, துணை முதல் அமைச்சராக யார் இருப்பது. இரு அணியிலும் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளை பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையில் உள்ளவர்கள் மூலம் தெரியப்படுத்தி, அதனை பன்னீர்செல்வம் தரப்பு ஏற்றுக்கொண்டால் இருதரப்பினரும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு வெளியாகும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், புரட்சித் தலைவி அம்மா கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை இரு அணியும் ஒன்றிணைந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதல் அமைச்சராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எங்கள் அணியின் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு கட்டுப்படுவேன் என்று கூறியுள்ளார்.