உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் குர்மபூரில், கடந்த 14-ம் தேதி ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமகள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. கொஞ்சம் தாமதமாக உணவு பரிமாறப்பட்டு வந்தது.
உணவு மெனுவில் ரசகுல்லாவும் இருந்தது. பஃபே முறை என்பதால், மணமகளின் உறவினர் ஒருவர் ரசகுல்லா ஸ்டாலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். ஒரு நபருக்கு ஒரு ரசகுல்லா கொடுக்க வேண்டும் என்பது அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு. ஆனால், மணமகனின் உறவினர் ஒருவர் இரண்டு ரசகுல்லாவை, அவராகவே எடுத்துவிட்டாராம்.
இதனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, அந்த இடமே கிட்டத்தட்ட போர்க்களமாக மாறியது. உணவு தட்டுகள் பறந்தன. உணவு பறிபாறும் கரண்டி மற்றும் ஸ்பூனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதையெல்லாம், மணமகள் அமைதியாக பால்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். தன் தந்தையையும் குடும்பத்தையும் அவமானப்படுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் இந்தத் திருமணம் வேண்டாம் என்று அந்தப் பெண் முடிவெடுத்தார். திருமணம் செய்துகொள்ளும்படி உறவினர்கள் கெஞ்சியும் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் திருமணம் நின்றுபோனது.
இதையடுத்து, மணமகளின் தந்தை இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது.