முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில், தற்போது பாராளுமன்ற அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு வழி நடத்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முரண்பாடுகளை வெளியிடும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையினை நடத்தி ஆதரவு பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், ஐ.தே.க உடன் பேச்சுவார்த்தையினை நடத்திய கூட்டமைப்பு, கடந்த வாரம் ஜே.வி.பியுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தது.
இருப்பினும் மீதமுள்ள, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் 3 சந்திப்புக்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடனும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தனித்தனியே பேச்சு நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.