தெய்வ வழிபாடுகள் தான் மனித வாழ்க்கைக்கு தெம்பூட்டுபவை. சோகமான நிலையில் இருக்கும் ஒருவரை யோகமான வழிக்கு மாற்றுவது தெய்வ வழிபாடுகள் தான். எந்த வழிபாடாக இருந்தாலும், குருவின் வழியாக அதை முறைப்படி செய்வது மிகுந்த பலனைத் தரும்.
ஒரு சிலருக்கு வழிபாடு மேற்கொண்ட உடனேயே பலன் கிடைத்து விடும்.
ஒரு சிலருக்கு அந்த பலன் தாமதமாகும். இதற்கு அவரவர் ஜாதக அமைப்பும், பூர்வ புண்ணிய பலனுமே காரணம். அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல், தொடர்ந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நிச்சயம் நற்பலனைப் பெறலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனையோ தோஷங்கள் இருக்கின்றன. பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நவக்கிரக தோஷம் என்று எண்ணற்ற தோஷங்கள் இருக்கின்றன.
இந்த தோஷங்கள் எல்லாம் நீங்கி சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவதற்காகத் தான் பிரதோஷத்தன்று நாம் ஈசனையும், நந்தியெம்பெருமானையும் வழிபடுகிறோம்.
இல்லத்திலோ, ஆலயங்களுக்குச் சென்றோ கோ பூஜை என்று சொல்லக்கூடிய, பசுவிற்கான பூஜையைச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் உருவாகும்.
பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவக்கிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.
பசுவின் வாலைத் தொட்டுக் கும்பிட்டாலே வந்த தடைகள் விலகும். கோவில்களில் அதிகாலை நேரம் நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் குடிகொள்ளும். மேலும் கிரக தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் அகல எளிய வழிபாடு கோ பூஜை தான்.
நம்மால் இயன்ற பொழுதெல்லாம் பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் உணவு கொடுக்கலாம். இதனால் நம்முடைய கர்ம வினைகள், முன்னோர்களின் சாபங்கள் நீங்கி மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
பசுவை தெய்வத்தின் அம்சமாக வழிபட வேண்டும். வாசமுள்ள மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். மஞ்சள், குங்குமம் வைத்து அதற்கு வஸ்திரம் சாத்தி, மூன்று முறை வலம் வந்து தீப தூபங்கள் காட்டி அதன் வால் பகுதியைத் தொட்டு வணங்க வேண்டும்.
பசு வசிக்கக் கூடிய கொட்டிலில் தியானம் செய்வதும், ஹோமம் செய்வதும் நல்லது. பசுவின் கோமியத்தை தீர்த்தமாக வீட்டிற்குத் தெளிப்பது வழக்கம். அதன் சாணம் கூட கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
வீட்டில் கிரகப்பிரவேசம் வைக்கும் பொழுது, கோபூஜை செய்து பசுவும், கன்றும் வீட்டிற்குள் நுழைந்த பிறகே, வீட்டினர் குடியேறுவர். இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் விலகி, சகல சம்பத்தும் கிடைக்க அது வழிகாட்டும் என்பது நம்பிக்கை. மணிவிழா, நூற்றாண்டு விழா போன்றவை கொண்டாடும் போது கூட, முதன் முதலில் கோபூஜை செய்து, பிறகு கஜ பூஜை செய்தபிறகு தான் மற்ற ஹோமங்களைத் தொடங்குவார்கள்.
அமாவாசையன்று பருத்திக் கொட்டைப் பாலில் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுப்பது மிகுந்த புண்ணியம். எந்தக் கிரகம் நமக்கு தீங்கு செய்கின்றதோ, அதற்குரிய கிழமையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பசுவிற்கு கொடுத்தால் கிரகப் பாதிப்புகள் அகல வழிபிறக்கும்.
நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் வாழைப்பழத்தைக் கீறி, அதன்மேல் வெல்லம் வைத்து பசுவிற்கு கொடுத்து வந்தால் பிதுர் தோஷம், சாப – பாவ தோஷங்கள் போன்றவை விலகி, குலம் தழைக்கும். கொஞ்சி மகிழும் குழந்தை இல்லத்தில் தவழ வேண்டுமானால் தவறாமல் கோபூஜை வழிபாட்டை மேற்கொள்வதோடு, பசுவிற்கு இயன்ற அளவு உணவோ, பழமோ கொடுத்து வர வேண்டும்.
மேலும் பாதியில் கட்டிடப்பணிகள் நின்றாலோ, கட்டிடம் கட்டுவதில் தடைகள் வந்தாலோ அந்த இடத்தில் கோமியத்தைதெளித்து பசுவையும் அந்த இடத்தைச் சுற்றிவரச் செய்தால் இல்லம் கட்டுவதில் இருந்த தடை அகலும். இதை அனுபவத்தில் தான் உணர முடியும். வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முன் கண்டிப்பாக கோபூஜை செய்ய வேண்டும்.
அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, கண்டகச் சனி போன்ற சனி ஆதிக்கங்கள் உள்ளவர்கள் சனிக்கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை கொடுப்பது நல்லது. பொதுவாக ஒவ்வொருவரும் இல்லத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோமியம் தெளித்தால் கண்திருஷ்டி மற்றும் மனக்குழப்பங்கள் மாறி மகிழ்வான வாழ்க்கையும், மகாலட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும். பசுவுடன், கன்றையும் சேர்த்து வழிபட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.
இல்லத்துப் பூஜையறையில் பசுவும் கன்றும் இணைந்த கண்ணன் படத்தைவைத்து வழிபடுவதன் மூலம் பிள்ளைச் செல்வம் உருவாக வழிபிறக்கும்.